இந்தியா உள்ளிட்ட 3 ஆசிய நாடுகளில் 1 மணி நேரத்தில் 4 நில நடுக்கம்; மக்கள் அச்சம்

புதுடில்லி: இந்தியா, மியான்மர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் 1 மணி நேரத்தில் 4 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள விவரம் வெளியாகி உள்ளது.



மியான்மரில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பின் சுவடு இன்னமும் மறையவில்லை. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் 5000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏராளமானோர் காயம் அடைந்ததோடு, பலர் வீடுகள், உடமைகளை இழந்தனர்.


இந் நிலையில் மியான்மரின் மெய்க்டில்லா நகரத்தில் இன்று 5.5 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் பீதியடைந்து தாம் இருக்கும் இடத்தில் இருந்து உடனடியாக வெளியேறினர். இதே போல, இமாச்சல பிரதேசம் மண்டியில் 3.4 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.


தஜிகிஸ்தான் நாட்டிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அந்நாட்டில் 2 நிலநடுக்கங்கள் முறையே 6.1 மற்றும் 3.9 என்ற ரிக்டரில் பதிவாகி உள்ளது. இன்று மட்டும் ஒரே நாளில் ஆசிய நாடுகளில் மொத்தம் 4 முறை நிலஅதிர்வு பதிவானது.

Advertisement