நிபுணர் குழுக்கள் ஒப்புதல் இன்றி ஈரோடு கோவில் சீரமைப்பு பணி கூடாது ஐகோர்ட் திட்டவட்டம்
சென்னை: 'மண்டல மற்றும் மாநில அளவிலான நிபுணர் குழுக்களின் ஒப்புதலை பெற்ற பின்னரே, கோவில்கள் சீரமைப்பு, கோபுர கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட மாக்கம்பாளையம் கிராமத்தில், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்க, ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவில் அறங்காவலர் சண்முகம் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை
மனுவில், 'கோவில் சீரமைப்பு மற்றும் ராஜகோபுர கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு, குடமுழுக்கு தேதி அறிவிக்கப்பட்டது.
'ஆனால், திடீரென குடமுழுக்கு நடத்த அனுமதி மறுத்து, ஹிந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை ரத்து செய்து, குடமுழுக்கு நடத்த அனுமதிக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, 'திருப்பணிக் குழு அமைத்து, அதில் என்னையும் சேர்த்து, குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும்' என, கோவில் பூசாரியும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகள், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தன.
உத்தரவு
அப்போது, அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, “உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மண்டல, மாநில நிபுணர் குழுக்களின் அனுமதி பெறாமல், கோவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், கோவில் குடமுழுக்கு நடத்த அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
“இரு நிபுணர் குழுக்களின் அனுமதியை பெற்று, சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து, மீண்டும் குடமுழுக்கு நடத்த, 60 நாட்கள் அவகாசம் தேவைப்படும்,” என்றார்.
இதை ஏற்ற நீதிபதி, 'நீதிமன்ற உத்தரவின்படி, நிபுணர் குழுக்களின் அனுமதி பெற்றே, கோவில் சீரமைப்பு, கோபுர கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
'சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்வது குறித்து, அறநிலையத்துறைக்கு விண்ணப்பித்து, உரிய அனுமதிகளை பெற்று, 60 நாட்களில் குடமுழுக்கு நடத்த வேண்டும்' என உத்தரவிட்டார்.
மேலும்
-
பெங்களூருக்கு 174 ரன்கள் இலக்கு; ஜெய்ஸ்வால், ஜூரேல் சிறப்பான ஆட்டம்
-
இந்தியா உள்ளிட்ட 3 ஆசிய நாடுகளில் 1 மணி நேரத்தில் 4 நில நடுக்கம்; மக்கள் அச்சம்
-
தயாரிப்பாளர், இயக்குநர் கலைப்புலி சேகரன் காலமானார்; திரையுலகத்தினர் அஞ்சலி
-
நாட்டுக்கு சேவை செய்வதற்கான முதற்படி தேர்தலில் ஓட்டளிப்பதே: சொல்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்
-
வாட்ஸ் அப் சேனல் அறிமுகம் செய்தது ரிசர்வ் வங்கி!
-
என்னை துருப்புச்சீட்டாக வைத்து திமு.க., கூட்டணியை உடைக்க முயற்சி: திருமாவளவன்