பலத்த காற்றால் படகுகள் சேதம் துாண்டில் வளைவு அமைக்க கோரிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் மற்றும் கள்ளிவயல் தோட்டம் துறைமுகத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 150க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

நேற்றுமுன்தினம் இரவு சுமார் மூன்று மணி நேரம், திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் வேகத்தால், விசைப்படகுகள், ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. இதில், சர்புதீன் என்பவரின் விசைப்படகு கடலில் மூழ்கியது.

தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலர் தாஜுதீன் கூறியதாவது:

கஜா புயலின் போது பெரியளவில் பாதிப்பை சந்தித்தோம். அப்போது, துாண்டில் வளைவு அமைக்க கோரினோம்; அமைக்கவில்லை. தற்போது, சேதமடைந்த படகுகளை சீரமைக்க அரசு இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement