பல்லவர் கால சிற்பம், பொம்மை மயிலம் அருகே கண்டெடுப்பு

விழுப்புரம்: மயிலம் அருகே, பல்லவர் கால சண்டிகேஸ்வரர் சிற்பம், சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த செண்டூர் கிராமத்தில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால சண்டிகேஸ்வரர் சிற்பம் மற்றும் சுடுமண் பொம்மை இருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து, அப்பகுதியில் கள ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:

செண்டூர் கிராமத்தில் சுவாமிக்கு சொந்தமான நிலப்பகுதியில் பலகை கல்லில் வடிக்கப்பட்ட சிற்பம் கிடந்தது. இந்த சிற்பத்திற்கு உரியவர் சண்டிகேஸ்வரர் ஆவார்.

சண்டிகேஸ்வரருக்கு இடதுபுறம் மரம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. வலது காலுக்கு கீழே பசு உள்ளது. சண்டிகேஸ்வரர் சிற்பம், பல்லவர் காலமான 8 - 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாகும்; 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

சுடுமண் பொம்மை



மேலும், இதே பகுதியில் மிகவும் சிறிய அளவிலான சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கழுத்து வரை மட்டுமே காணப்படும் இந்த உருவம் குழந்தையின் உருவமாக இருக்கலாம். இந்த பொம்மையும் சண்டிகேஸ்வரர் சிற்பத்தின் காலத்தை சேர்ந்தது என மூத்த தொல்லியளாளர்கள் ஸ்ரீதரன், துளசிராமன் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.

Advertisement