130 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கும் திட்டம் விழுப்புரம் - விருத்தாசலம் வழித்தடம் தயார்

விருத்தாசலம் : விழுப்புரம்-திருச்சி இடையே 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்கும் திட்டத்தில், விழுப்புரம் - விருத்தாசலம் வரை வழித்தடம் தயாராக இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில்வே விதிப்படி, 'குரூப்- ஏ' வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ., வரையும், 'குரூப்- பி' தடத்தில், 130 கி.மீ., வரையும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை-ரேணிகுண்டா, அரக்கோணம்-ஜோலார்பேட்டை, சென்னை-கூடூர் வழித்தடங்களில் அதிவிரைவு ரயில்கள், மணிக்கு 110 முதல் 130 கி.மீ., வரையிலான வேகத்தில் இயக்கப்படுகின்றன.
ஆனால், சென்னை-விழுப்புரம்-திருச்சி வழித்தடத்தில், தற்போது மணிக்கு 90 முதல் 110 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதிக வளைவுகள், பழைய பாலங்களை மேம்படுத்தாமல் இருப்பது போன்ற காரணங்களால் வேகத்தை அதிகரிப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
இதையடுத்து, இந்த தடத்தில் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் ரயில்கள் செல்ல மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
மூன்று முறைகளில் மேம்பாடு தீவிரம்
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'சூப்பர் எலிவேஷன் என்ற முறையில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மைய ஈர்ப்பு விசை, மைய விலக்கு விசையின் அடிப்படையில் ரயில் பாதைகள் இருப்பதால், வேகமாக ரயில்கள் செல்லும்போது வளைவான பகுதியில் ரயில் பெட்டி லேசாக உயரும். ஆனால் முழுதும் பாதுகாப்பான பயணமாகவே இருக்கும்.
ஆனால், 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்கும் போது, மூன்று முக்கிய மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும். அதன்படி, பென்சிங் அமைப்பு, 2 டிகிரிக்குள் தண்டவாள வளைவுகள் மாற்றம் (ரீ - அலைன்மெண்ட்), பாதையை மாற்றும் கருவி (திக் வேபிள் சுவிட்ச் மாற்றம்) ஆகியவை சீரமைக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட ரயில் பாதையில் யாரும் நுழையாத வகையில், எல்லையில் பென்சிங் அமைக்கப்படும். 2 டிகிரிக்கு மேல் வளைவுகள் இல்லாத வகையில், சரி செய்யப்படும். மெயின் லைனில் இருந்து லுாப் லைனுக்கு ரயில்களை மாற்றும் (திக் வேபிள் சுவிட்ச்) கருவி தடிமனாக இருக்க வேண்டும். இம்மூன்றை சரி செய்ததும், ரயில்கள் 130 கி.மீ., வேகத்தில் இயங்க முடியும்.
130 கி.மீ., வேகத்துக்கு ரெடி
அதன்படி, விழுப்புரம்-விருத்தாசலம்-அரியலுார்- திருச்சி இடையே 100 இடங்களில் வளைவுகள் உள்ளன. இவற்றை 2 டிகிரிக்குள் சரி செய்ய வேண்டும். குறிப்பாக, விழுப்புரம்- விருத்தாசலம் இடையே 20 இடங்களில் இருந்த 2 டிகிரி வளைவுகள் சீரமைக்கப்பட்டன.
இதனால், விழுப்புரத்தில் இருந்து விருத்தாசலம் வரை 130 கி.மீ., வேகத்தில் எப்போது வேண்டுமானாலும் ரயில்களை இயக்கலாம். அதுபோல், விருத்தாசலத்தில் இருந்து அரியலுார், திருச்சி வரை உள்ள 2 டிகிரி வளைவுகளை சீரமைத்து, 1 டிகிரி வரை மாற்றம் செய்ய வேண்டும். பின், விழுப்புரம்-திருச்சி இடையே 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க முடியும்.
இப்பணிகள் முடியும் வரை சீரமைக்கப்பட்ட பகுதியில் 130 கி.மீ., வேகத்திலும், மற்ற இடங்களில் 110 கி.மீ., வேகத்திலும் ரயில்கள் இயங்க அனுமதி கிடைக்கும்.
விழுப்புரம்- திருச்சி இடையே இப்பணிகள் 75 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. மீதமுள்ள பணிகள் படிப்படியாக நடந்து வருகின்றன. ஓரிரு மாதங்களில் இப்பணிகள் முடிந்ததும், 130 கி.மீ., வேகத்தில் ரயில்கள் செல்லும்.
பயண நேரம் குறையும்
ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதன் மூலம் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பயண நேரம் குறைய வாய்ப்புள்ளது. குறிப்பாக, 30 முதல் 45 நிமிடங்கள் நேரம் மிச்சமாகும். இருவழி ரயில் பாதை அமைக்கப்பட்டதால் எதிரெதிர் திசைகளில், சிக்னல் பிரச்னை இல்லாமல் தென்மாவட்ட ரயில்கள் குறித்த நேரத்திற்கு செல்கின்றன. மேலும், 130 கி.மீ., வேகத்திற்கு ரயில்கள் இயங்கினால், தலைநகர் சென்னையில் தங்குவதை தவிர்த்து, தினசரி சென்று வர முடியும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பா.ஜ., கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர், ரயில் நிலைய மேம்பாட்டுக்குழு உறுப்பினர் செந்தில்குமார் கூறுகையில், 'பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ரயில்வே நிர்வாகம் மிகச்சிறந்த முறையில் மேம்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு போக்குவரத்து வசதியே இன்றியமையாதது என்பதை உணர்ந்து விமானம், ரயில், கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து வசிகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல லட்சம் கோடிகளை செலவிடுகிறது.
தமிழ் மக்களை மதிக்கும் பிரதமர் மோடி, மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்கும் திட்டம் தென் மாவட்ட பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும். பா.ஜ.,வின் மக்கள் நலத்திட்டங்கள், தமிழக மக்களிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை' என்றார்.

மேலும்
-
பெங்களூருக்கு 174 ரன்கள் இலக்கு; ஜெய்ஸ்வால், ஜூரேல் சிறப்பான ஆட்டம்
-
இந்தியா உள்ளிட்ட 3 ஆசிய நாடுகளில் 1 மணி நேரத்தில் 4 நில நடுக்கம்; மக்கள் அச்சம்
-
தயாரிப்பாளர், இயக்குநர் கலைப்புலி சேகரன் காலமானார்; திரையுலகத்தினர் அஞ்சலி
-
நாட்டுக்கு சேவை செய்வதற்கான முதற்படி தேர்தலில் ஓட்டளிப்பதே: சொல்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்
-
வாட்ஸ் அப் சேனல் அறிமுகம் செய்தது ரிசர்வ் வங்கி!
-
என்னை துருப்புச்சீட்டாக வைத்து திமு.க., கூட்டணியை உடைக்க முயற்சி: திருமாவளவன்