தனியார் பஸ்சை சிறைபிடித்த மக்கள்

ஒட்டன்சத்திரம்: பழநி சென்ற தனியார் பஸ் ஒட்டன்சத்திரம் அருகே ஸ்ரீராமபுரத்தில் ஒரு மணி நேரம் சிறைபிடிக்கப்பட்டது.

மதுரையிலிருந்து நேற்று மாலை 6:30 மணிக்கு பழநிக்கு தனியார் பஸ் புறப்பட்டது. அதில் ஸ்ரீராமபுரம் செல்ல திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் மகள், மருமகன் மற்றும் சிலர் பயணித்தனர்.

அவர்கள் கண்டக்டரிடம் ஸ்ரீராமபுரத்திற்கு டிக்கெட் கேட்டபோது, 'பழநிக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு ஸ்ரீராமபுரத்தில் இறங்கி கொள்ளுங்கள்' என கண்டிப்புடன் கூறினாராம். அவர்களும் வேறு வழி இன்றி பழநிக்கு டிக்கெட் எடுத்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இரவு 8:15 மணியளவில் அந்த பஸ் ஸ்ரீராமபுரத்திற்கு வந்தது.

அங்கு காத்திருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த பஸ்ஸை மறித்து சிறை பிடித்து கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் கண்டக்டர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து இரவு 9:15 மணி அளவில் பஸ் விடுவிக்கப்பட்டது.

பொதுமக்கள் கூறியதாவது:

இந்த வழியாக மதுரைக்குச் செல்லும் தனியார் பஸ்கள் குறிப்பிட்ட ஊர்களுக்கு உரிய டிக்கெட் கட்டணம் வசூல் செய்யாமல் கூடுதலாக வசூலிக்கின்றனர். இரவு நேரங்களில் இடைப்பட்ட ஊர்களில் பயணிப்பவர்களை பஸ்ஸில் ஏற்றி செல்லாமல் புறக்கணிக்கின்றனர் என்றனர்

Advertisement