சந்தேகமா... டாக்டரை கேளுங்கள்

எந்த பிரச்னையுமின்றி அபார்ஷன் ஏற்படுவது ஏன்.

- -திவ்யபாரதி, மதுரை

முதல் மூன்று மாதங்களுக்குள் நிறைய பெண்களுக்கு அபார்ஷன் (கரு கலைவது) ஏற்படுகிறது. சிலருக்கு ஆரம்ப காலத்தில் மாதவிடாய் போன்று அவர்களுக்கு தெரியாமலேயே அபார்ஷன் ஆகிறது. 35 நாட்களில் கண்டுபிடிக்காமல் அபார்ஷன் என தெரியாமல் மாதவிடாயாக வெளியேறி விடும். அந்த கரு அசாதாரண கருவாக இருக்கும். இயற்கையாகவே அந்த கரு வளராது.

இரண்டு, மூன்று மாதங்களில் அபார்ஷன் ஆவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. மரபணு கோளாறு உள்ள கரு, கர்ப்ப பையில் நஞ்சுக்கொடி பலமாக இல்லாமல் இருப்பதால் ரத்தப்போக்கு ஏற்படுவது போன்ற காரணங்களால் அபார்ஷன் ஏற்படும். கர்ப்பபை வாய் பலமில்லாமல் இருந்தால் 4வது, 5வது மாதத்தில் கூட அபார்ஷன் ஏற்படும்.

8, 9 வது மாதத்தில் குழந்தைகளின் இயக்கத்தை, அசைவுகளை கர்ப்பிணிகள் நன்றாக கவனிக்க வேண்டும். மதியம் சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கவனிக்கும் போது மூன்று முதல் நான்கு முறை குழந்தையின் அசைவு இருக்கும். அதனை கண்காணிக்க வேண்டும். அப்படி இருந்தால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். அதிக ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வயிற்றில் குழந்தை செயல்படாமல் இருக்கும் வாய்ப்புள்ளது. எனவே குழந்தையின் அசைவுகளை கண்காணிக்க வேண்டும்.

நார்மல் டெலிவரிக்கு தினமும் நடைபயிற்சி, இடுப்பு எலும்பை பலப்படுத்தும் பயிற்சி, 8 மணி நேரம் நல்ல துாக்கம் தேவை. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நேராக படுத்தால் காலுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை கர்ப்பபை சுருக்கி விடும் என்பதால் இடதுபுறமாக சரிந்து படுக்க வேண்டும்.

- டாக்டர் ஹேமலேகாமகப்பேறு, மகளிர் நல சிறப்பு நிபுணர், மதுரை

எனக்கு வயது 48. பல் சீரமைப்பு சிகிச்சை செய்ய வேண்டும். பல் சீரமைப்பு சிகிச்சை அலைனர்கள், உலோக பிரேஸ்களுக்கும் இடையிலான வேறுபாடு என்ன.

- ராஜ்கபூர், நத்தம்

அலைனர்கள் (Aligners) பிளாஸ்டிக் போர்வைகளாக மென்மையானவையாக இருக்கும். வாயில் காயங்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவு, உணவு சாப்பிடும் போது எளிதில் அகற்றலாம், நீக்கக் கூடியவை. இதை தினசரி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். உலோக பிரேஸ்கள் (Metal Braces) உலோகப்பட்டிகள் , கம்பிகளால் கட்டமைக்கப்பட்டவை. வெளியில் தெளிவாக தெரியும். சில நேரங்களில் வாயில் எலும்பு, ஓடுகளுக்கு சிரமம் தரலாம். மருத்துவர்கள் மட்டுமே இதை அகற்ற முடியும். தொடர்ந்து அணிந்திருக்க வேண்டும். சாப்பிடும் உணவுகள் இதில் சிக்க வாய்ப்பு அதிகம்.

- -டாக்டர் எம். கவுதம் செந்தில்பல் மருத்துவ நிபுணர், நத்தம்

கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகளை எப்படி தடுக்கலாம்.

- கே.முனீஸ்வரன், ஆண்டிபட்டி

மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். வெயிலின் தாக்கத்தால் சுற்றுப்புற வெப்பநிலை உடலின் சராசரி வெப்ப நிலையை விட அதிகமாகும் போது கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகும். அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலை சுற்றல், தசை பிடிப்பு, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வாக பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். எலுமிச்சை சாறு மற்றும் உப்புக்கரைசல் (ஓ.ஆர்.எஸ்.) பருக வேண்டும். இளநீர், மோர் குடிக்க வேண்டும். நுங்கு, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்தவற்றை உண்ண வேண்டும்.

- டாக்டர் த.ப்ரியாஅரசு ஆரம்ப சுகாதார நிலையம்வீரபாண்டி

நான் சில நேரங்களில் தனியாக பேசுகிறேன். எவ்வாறு சரி செய்வது.

- அ.சந்தோஷ், சிவகங்கை

இது ஒரு விதமான மனநோய். மனச்சிதைவு என்றும் கூறலாம். அதிகமாக மது அருந்துபவர்களுக்கு இந்த நோய் வரும். இது மாதிரியான மனநோய் உள்ளவர்களுக்கு மாய ஒலி கேட்பது போல் இருக்கும். தனியாக எங்கும் செல்லக்கூடாது. மனதை அமைதியாக, மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். முடிந்த அளவு தனிமையை தவிர்க்க வேண்டும். மது அருந்தக்கூடாது. இரவில் நன்றாக துாங்க வேண்டும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க வேண்டும். முடிந்த அளவு மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளில் நேரத்தை செலவிட வேண்டும்.

டாக்டர் முகமது ரபிமனநல மருத்துவர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைசிவகங்கை

எனக்கு 32 வயது ஆகிறது. லோடுமேன் வேலை செய்து வருகிறேன். அடி வயிறு வீக்கமாக உள்ளது. அடிக்கடி வலி ஏற்படுகிறது. என்ன செய்யலாம்.

- கி.செல்வம் சிவகாசி

அடிவயிறு வீக்கமாக இருப்பதால் குடல் இறக்கமாக இருக்கலாம். அதிக எடையை துாக்குவதால் குடல் இறக்கம் ஏற்படும். அதிக எடையை துாக்கக்கூடாது. வேறு வழி இன்றி துாக்குவதாக இருந்தால் கண்டிப்பாக பெல்ட் அணிய வேண்டும். மருந்து மாத்திரையில் இது சரி ஆகாது. பரிசோதனை செய்து குடல் இறக்கம் என உறுதி செய்தால் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

- டாக்டர் பாரத்அறுவை சிகிச்சை நிபுணர்இ.எஸ்.ஐ., மருத்துவமனைசிவகாசி

Advertisement