மதுரை 'ஜிம்'மில் பெண் டாக்டரை வீடியோ எடுத்த இளைஞர் கைது

3

மதுரை, : மதுரையில் 'ஜிம்'மில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட பெண் டாக்டரை அலைபேசி மூலம் ஏடாகூடாமாக வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை அய்யர்பங்களாவில் வசந்தகுமார் என்பவர் 5 ஆண்டுகளாக 'ஜிம்' நடத்தி வருகிறார். இங்கு தினமும் ஆண், பெண்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இங்கு ஓராண்டாக கொடிக்குளம் ஞானசேகர் மகன் சிலம்பரசன் 24, என்பவர் பயிற்சிக்காக வந்தார். 'ஜிம்'மிற்குள் அலைபேசி பயன்படுத்த தடை உள்ள நிலையில், அவர் மறைத்து எடுத்துவந்து பயிற்சியில் ஈடுபட்ட பெண் டாக்டர் ஒருவரை தொடர்ந்து வீடியோ எடுத்து வந்துள்ளார். இதை கவனித்த டாக்டர், தனது அம்மாவுக்கும், தம்பிக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்தார்.

அவர்கள் வந்து சிலம்பரசனின் அலைபேசியை ஆய்வு செய்தபோது ஏடாகூடாமாக வீடியோ எடுத்தது தெரிந்தது. இதுகுறித்து கேட்டபோது அவர்களிடம் சிலம்பரசன் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் விசாரித்து சிலம்பரசனை கண்டிக்க, வேறுவழியின்றி பெண் டாக்டரிடம் மன்னிப்பு கேட்டார். எதிர்காலம் கருதி போலீசில் புகார் கொடுக்க விரும்பவில்லை என பெண் டாக்டர் தெரிவித்தார். இதைதொடர்ந்து ஜிம் நிர்வாகம் தரப்பில் புகார் செய்யப்பட்டது. சிலம்பரசனை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement