2,750 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் கிளியனூர் அருகே 3 பேர் கைது

வானூர் : கிளியனூர் அருகே வேனில் 2,750 கிலோ ரேஷன் அரிசி கடத்திய மூன்று பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் பகுதியில் இருந்து திண்டிவனம் பகுதிக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் போலீசார் நேற்றிரவு 10;00 மணிக்கு, கிளியனூர் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற டாடா 407 வேனை மடக்கி சோதனை நடத்தினர்.

அதில், 55 மூட்டைகளில் தலா 50 கிலோ கொண்ட ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரிய வந்தது. வேனில் இருந்த மூவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர்கள், திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த கக்கன் மகன் அஜித், 29; பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரிட்ஜ் மகன் வசந்த்குமார், 20; சியாராம் மகன் சஞ்சய், 40; என்பதும், வானூர் அடுத்த நெசல், ராவுத்தன்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, கடத்தி வந்தது தெரிய வந்தது.

அதையடுத்து போலீசார், மூவரையும் கைது செய்து, கடத்தப்பட்ட 2,750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement