இறுதிக்கட்டத்தில் ராயபுரம் மாட்டு கொட்டகை பணி

ராயபுரம்:சென்னையில் தெருநாய்கள் மற்றும் மாடுகளால் ஏற்படும் விபத்து, உயிர்பலி சம்பவங்கள் மாநகராட்சிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. முதற்கட்டமாக, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதித்தனர். ஆனால், எந்த பயனுமில்லை. தெருநாய்கள் மற்றும் கால்நடைகளால் ஏற்படும் பிரச்னைகள் தொடர்ந்தபடி தான் உள்ளது.

இந்நிலையில், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் தொல்லைகளை தடுக்க, மாநகராட்சி சார்பில் 15 இடங்களில் மாட்டு கொட்டகைகள் கட்டப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக, ராயபுரம், பேசின்பாலம் சாலையில், 7,700 சதுர அடியில், 1.30 கோடி ரூபாய் செலவில், 200 மாடுகள் தங்கும் அளவிற்கு மாட்டுக் கொட்டகை அமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், அடுத்தமாதம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஒவ்வொரு மண்டலத்திலும் மாட்டுக் கொட்டகை அமைக்கப்பட உள்ளது. இந்த மாட்டு கொட்டகை மூலம், ஒரு மாட்டிற்கு நாள் ஒன்றிற்கு 10 ரூபாய் வாடகை வசூலிக்கப்பட உள்ளது. அந்தவகையில், மாதம் 300 ரூபாய் செலவு தான் ஆகிறது. உரிமையாளர்கள் காலை, மாலை வேளைகளில் இங்கு வந்து பாலை கறந்து செல்லலாம். மாட்டிற்கு தீனியும் வழங்கலாம். பராமரிப்பு பணியை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது.மேலும் மாடுகளுக்கு தீவனம் வழங்குவது, சாணியை அப்புறப்படுத்துவது, மாட்டை குளிக்க வைப்பது உள்ளிட்டவை, நவீன முறையில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதை மாடு வளர்ப்பவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement