கட்டுமான பணி கால அட்டவணையில் கவனம்; ஏற்ற இறக்கங்களை சரி செய்வது மிக அவசியம்

கட்டுமான பணியின் தன்மையை பொறுத்து, அதற்கு பணி நடைபெற்ற முன்னும், பின்னும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் முன்னெச்சரிக்கை தேவை.

போதிய கவனம் செலுத்தவில்லையேல், பிற்காலத்தில் கட்டுமான தரத்தில் பாதிப்பு ஏற்படுவதுடன், பொருளாதாரம் சார்ந்து, மன உளைச்சலும் ஏற்படும்.

அதை சமாளிக்க தேவையான உபகரணங்களை பயன்படுத்தி, பணியின் தரத்தை எந்தவிதத்திலும் குறைக்காமல் பாதுகாக்க வேண்டும். அதாவது, செங்கல் கட்டுமானம் என்றால், அது முடிந்த பின்பு தொடர்ந்து ஏழு நாட்களுக்கு, தண்ணீர் ஊற்ற வேண்டும். அதேபோல், கையில் கான்கிரீட் போடப்பட்டால், 24 மணி நேரத்திற்கு பிறகு பாத்தி கட்டி, தண்ணீர் தேக்க வேண்டும். ரெடிமிக்ஸ் கான்கிரீட்டாக இருந்தால், ஒரு மணி நேரத்திலே அதை ஈரப்படுத்த வேண்டும். கட்டுமான பணிக்கு தேவையான அளவு மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும்.

ஒவ்வொரு வேலை முடிந்த பின்பும், அந்த வேலை சரியாக செய்யப்பட்டுள்ளதா, செய்த இடம் சுத்தமாக உள்ளதா, வேலைக்கு உண்டான அளவு பொருட்கள் செலவாகி உள்ளனவா, இல்லை அதிகமாகி உள்ளனவா என கணக்கிட்டு, உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்.

கட்டுமானப்பணி முடியும் கால அளவு, அட்டவணையில் குறிப்பிட்டு உள்ளபடி, ஒரு நாளில் எவ்வளவு பணி முடிந்து இருக்க வேண்டும் என்பதை, ஒவ்வொரு நாளும் கண்காணித்து சரி செய்துகொண்டே வர வேண்டும்.

குறிப்பிட்ட ஆறு மாதம் அல்லது ஆண்டு பணி அளவு அட்டவணை கால அளவில், இடைப்பட்ட பணியில் ஏற்படும், ஏற்ற இறக்கங்களில் சரி செய்துவிட வேண்டும். நிர்ணயித்த கால அளவில் பணி முடிந்தாக வேண்டும்.

பணியின் தரத்தை, எக்காரணத்தை முன்னிட்டும் குறைக்க சம்மதிக்கக்கூடாது. ஒவ்வொரு பணி முடிந்ததும், அதற்குண்டான கூலி, கால அளவு, அதை கண்காணித்து ஒப்புதல் அளித்த அதிகாரி கையொப்பம் அனைத்தும், பதிவு செய்யப்பட வேண்டும். பணியில் ஏற்படும் மாற்றங்களுக்கு, அதன் உரிமையாளர் அல்லது ஆர்க்கிடெக்ட்டிடம், மாற்றம் செய்ததற்கான காரணம், அதற்குண்டான கூடுதல் பணச்செலவையும் எழுதி வாங்க வேண்டும்.

இப்பணிகளை ஒவ்வொரு நாளும் கண்காணிப்பது, பொறியாளரின் கடமை என்கிறார், 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ்.

Advertisement