போலீஸ்காரரை தாக்கிய தந்தை, மகனுக்கு காப்பு

வேளச்சேரி, வேளச்சேரி காந்தி சாலையில், நேற்று முன்தினம், தி.மு.க., சார்பில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அப்பகுதி சாலையில், இரண்டு பேர் போதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காமராஜ் என்ற போலீஸ்காரர், அவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறினார்.

அதற்கு, அந்த இருவரும் போலீஸ்காரரை தரக்குறைவாக பேசி, அவரது சட்டையை பிடித்து தள்ளிவிட்டு தாக்கினர்.

நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் சமாதானம் செய்ததையடுத்து, போலீஸ்காரரை தாக்கிய அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

இன்ஸ்பெக்டர் விமல் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார். போதை நபர்கள் மீது தவறு உள்ளது தெரிந்தது. பின், போலீஸ்காரர் காமராஜ் தனி அறிக்கை அளித்தார்.

அதன்பேரில், இரண்டு பேர் குறித்தும் போலீசார் விசாரித்தனர். அதில், வேளச்சேரி, நடராஜன் தெருவை சேர்ந்த கணேசன், 55, அவரது மகன் பிரதீபன், 33, என தெரிந்தது.

நேற்று, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement