போதை ஆசாமி அலப்பறை; வாகன ஓட்டிகள் தவிப்பு

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் போதை ஆசாமி வாகனங்களை மறித்து அலப்பறையில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது.

விருத்தாசலம் - பெண்ணாடம் சாலையில் உள்ள கடைவீதி பஸ் நிறுத்தம் எந்நேரமும் நெரிசல் மிகுந்த பகுதியாகும். இங்கு நேற்று மாலை, 40 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர், மதுபோதை தலைக்கேறிய நிலையில், சாலையில் சென்ற வாகனங்களை மறித்து அலப்பறையில் ஈடுபட்டார்.

அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்தும் கேட்காமல், அவர்களை ஆபாசமாக திட்டி, தகராறில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் சென்று அவரை அப்புறப்படுத்த முயன்றும் முடியவில்லை.

ஒரு கட்டத்திற்கு மேல், அவ்வழியே வந்த நெடுஞ்சாலைத்துறை பொலீரோ ஜீப்பை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பொறுமை இழந்த போலீசார், அவரை குண்டுகட்டாக ஆட்டோவில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் 20 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதித்தது.

Advertisement