வக்ப் சட்டத்திற்கு எதிரான வழக்குகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

83

புதுடில்லி: வக்ப் சட்டத்திற்கு எதிராக காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பார்லிமென்டில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்த சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, அச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ், ஓவைசி கட்சி, அகில இந்திய முஸ்லிம் லீக், திமுக உள்ளிட்ட கட்சிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் அனைத்தையும் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். இன்று வழக்கு விசாரணை தொடங்கியது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.

வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுதாரர்களில் ஒருவருக்காக மூத்த வக்கீல் கபில் சிபலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வியும் தங்களின் வாதத்தை முன் வைத்தனர்.

கபில் சிபில் வாதம்; முஸ்லிம் மத உரிமைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. 1995 வக்ப் சட்டத்தை முழுமையாக மாற்றும் விதமாக தற்போதைய சட்டத்திருத்தம் உள்ளது. வக்ப் திருத்தச் சட்டத்தில் உள்ள அனைத்தும் எதிராகவே உள்ளன. 20 கோடி முஸ்லிம்களின் உரிமைகளை பார்லிமென்ட் பறித்துள்ளது. வக்ப் வாரிய உறுப்பினர்களாக இதுவரை முஸ்லிம்களே இருந்து வருகின்றனர்.

த.வெ.க., தரப்பு வக்கில் அபிஷேக் சிங்வி வாதம்; 8 லட்சத்திற்கும் அதிகமான வக்ப் சொத்துக்களை கையகப்படுத்தும் நோக்கில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பார்லிமென்ட் கட்டடம் கூட வக்ப் சொத்து என்று கூறுகின்றனர். அனைத்துமே கட்டமைக்கப்பட்ட கதை. எதை வேண்டுமோனாலும் வக்ப் சொத்து என்று உரிமை கொண்டாட முடியாது. வக்ப் சொத்துக்களை கலெக்டர்கள் தீர்மானிப்பது என்பது முடியாத காரியம்.

தி.மு.க., வக்கில் வில்சன் வாதம்; வக்ப் திருத்தச் சட்டம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. 5 ஆண்டுகள் மதத்தை பின்பற்றினால் தான் நன்கொடை வழங்க முடியும் என்பது ஏற்புடையதல்ல.

பல தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசுக்கு கேள்விகளை எழுப்பினர்.

ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி ஹிந்துக்கள் மட்டுமே அதனை நிர்வகிக்க முடியும். அப்படி இருக்கும் போது, வக்ப் சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை கையாளுகிறீர்கள். நன்கொடை மூலம் பெறப்படும் சொத்துக்களை பதிவு செய்வது என்பது மிகவும் கடினமானது. வக்பு சொத்தில் இருந்து வரும் வாடகை யாரிடம் செலுத்தப்படும்?

பழமையான , தொன்மையான மசூதிகளுக்கு நிலப்பத்திரம் இருக்காது. தொன்மையான, தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மசூதிகளுக்கு புதிய வக்ப் சட்டத்தினால் பாதிப்பு ஏற்படுமா? வக்ப் சொத்துக்களை கோர்ட் முடிவு செய்ய ஏன் அனுமதிக்கக் கூடாது? இந்த விவகாரத்தில் கலெக்டர் முடிவு செய்வது நியாயமானதா? என்று கேள்வி எழுப்பினர்.


மேலும், வக்ப் நிர்வாகக் குழுவில் 2 ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமனம் செய்யும் முறை செல்லும். வக்ப் உறுப்பினர்கள் அனைவரும் முஸ்லிம்களாகவே இருக்க வேண்டும்.

வக்ப் விவகாரத்தில் 3 வழிமுறைகளே உள்ளன. மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் முடிவு செய்வது ஒரு வழிமுறை. மனுக்களை பொதுவான ஒரு ஐகோர்ட்டுக்கு அனுப்புவது மற்றொரு வழிமுறையாகும். அப்படியில்லையெனில், அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்றுவது கடைசி வழிமுறையாகும், என தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் பதிலளிக்கக் கோரி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட், வக்ப் நிர்வாகக் குழுவில் நீதிபதிகள் நியமனம், இஸ்லாமியர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க வேண்டும் ஆகிய இடைக்கால உத்தரவுகளை, நாளை பிற்பகல் வரை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டனர்.

Advertisement