உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பிஆர் கவாய்

4

புதுடில்லி: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பிஆர் கவாயை நியமிக்க வேண்டும் என தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா உள்ளார். இவர் கடந்த நவ.,11 அன்று தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். வரும் மே 13 அன்றுடன் ஓய்வு பெற உள்ளார்.


இதனையடுத்து அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரை செய்யும்படி சஞ்சீவ் கன்னாவிடம் மத்திய அரசு கூறியது. இதனை ஏற்று, மூத்த நீதிபதி பிஆர் கவாய் பெயரை, சஞ்சீவ் கன்னா பரிந்துரை செய்துள்ளார். மே 14 அன்று கவாய், தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். இவர், அடுத்த ஆறு மாதங்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருப்பார். நவ., மாதம் ஓய்வு பெற உள்ளார்.


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஜி. பாலகிருஷ்ணனுக்கு பிறகு பதவியேற்கும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இரண்டாவது நீதிபதி என்ற பெருமை கவாய்க்கு கிடைக்க உள்ளது.


யார் இவர்





இவரது முழுப்பெயர் பூஷன் ராமகிருஷ்ணா கவாய் ஆகும். மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் 1960 நவ.,24 ல் பிறந்தார்.இவரது தந்தை ஆர்.எஸ் கவாய் இந்திய குடியரசு கட்சி(கவாய்) யின் தலைவராகவும், ம.பி., கவர்னராகவும் பதவி வகித்து உள்ளார்.


பி ஆர் கவாய் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையிலும், மும்பை உயர்நீதிமன்றத்திலும் பயிற்சி பெற்றார். மும்பை உயர்நீதிமன்றத்தின் அட்வகேட் ஜெனரல் ஆகவும், நீதிபதியாகவும் பதவி வகித்த உள்ளார். கூடுதல் அரசு பிளீடர், கூடுதல் பப்ளிக் ப்ராசிக்யூட்டர் ஆக மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் பணியாற்றி உள்ளார்.


2003 ல் மும்பை ஐகோர்ட்டின் கூடுத்ல் நீதிபதியாகவும், 2005 ல் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2019 ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் இவரும் ஒருவர் ஆவார்.

Advertisement