பீகார் சட்டசபை தேர்தல்; காங். கூட்டணியில் இணைகிறார் ராம் விலாஸ் பாஸ்வான் சகோதரர்

பாட்னா: பீகாரில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகி காங். கூட்டணியில் ராம் விலாஸ் பாஸ்வான் சகோதரர் பசுபதிகுமார் பாரஸ் இணைகிறார்.
பீகாரில் லோக் ஜனசக்தி நிறுவனர் ராம்விலாஸ் பாஸ்வான் லோக் ஜனசக்தி என்ற கட்சி நடத்தி வந்தார். அவர் மறைவக்கு பின்னர், பாஸ்வான் சகோதரர் பாரஸ் ஒரு பிரிவாகவும், மகன் சிராஜ் பாஸ்வான் இன்னொரு பிரிவாகவும் கட்சி நடத்தினர்.
இவர்களில் சிராக் பாஸ்வானுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாரசுக்கு சீட் தரவில்லை. அதன் பின்னர், இருவரும் தனித்தனியே கட்சியை நடத்தி வர, சிராக் பாஸ்வான் மத்திய அமைச்சரானார்.
இவ்வளவு காலம் அமைதியாக இருந்த பாரஸ், சில மாதங்களில் பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு இப்போது லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான கூட்டணியில் இணைய முயற்சி மேற்கொண்டு உள்ளார். இதையடுத்து, பா.ஜ.,தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொண்ட அவர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது;
2014ம் ஆண்டு முதல் பா.ஜ., கூட்டணியில் இருந்து வருகிறேன். நாங்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டோம். தலித்துகளை நாங்கள் முன்னிறுத்துவதால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
பீகாரில் நடத்தப்படும் ஒவ்வொரு தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் எங்களை பற்றி குறிப்பிடவே இல்லை. எனவே இப்போது கூட்டணியில் இருந்து விலகுகிறேன். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மக்களின் எண்ணங்களுக்கு எதிராக உள்ளார். அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது.
22 மாவட்டங்களில் நான் சுற்றுப்பயணம் சென்ற போது, மக்கள் புதிய அரசை தேர்ந்தெடுக்க உள்ளனர் என்பதை அறிந்தேன். எஞ்சிய 16 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்த போகிறேன். நாங்கள் தனித்துப் போட்டியிட தயாராகி வருகிறோம். காங். மற்றும் இடதுசாரிகள் கூட்டணியுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
தி.மு.க., ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வு; சீமான் ஆவேசம்
-
முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கலவரம்: மம்தா குற்றச்சாட்டு
-
சொத்துவரி பெயர் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி ஊழியர்கள் கைது
-
நேஷனல் ஹெரால்ட் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் பொறுப்பை ஏற்க வேண்டும்: அஷ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தல்
-
தென்காசி அருகே கொடூர சம்பவம் : மனைவி கண்முன்னே கணவனை வெட்டி தலையை துண்டித்த கும்பல்!
-
போரல் - கே.எல்.ராகுல் ஜோடி நிதான ஆட்டம்; மெல்ல மெல்ல ரன் குவிக்கும் டில்லி