'ஹெல்மெட்' இன்றி டூவீலரில் வந்தஅதிகாரிகள் உள்பட 51 பேருக்கு 'பைன்'



'ஹெல்மெட்' இன்றி டூவீலரில் வந்தஅதிகாரிகள் உள்பட 51 பேருக்கு 'பைன்'



நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு, 'ஹெல்மெட்' அணியாமல், டூவீலர்களில் வந்த அரசு அதிகாரிகள் உட்பட, 51 பேரிடம், 51,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டர் உத்தரவுப்படி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார், மாவட்டம் முழுவதும் அடிக்கடி வாகன தணிக்கை செய்து, சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்து வருகின்றனர். குறிப்பாக, டூவீலர்களில் செல்வோர், சாலை விபத்தில் சிக்கி உயிர் சேதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், 'ஹெல்மெட்' அணியாமல் டூவீலரில் செல்லும் ஆண், பெண் என, அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு, டூவீலர்களில் வருவோர்களின் வாகனங்களை ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையில், போலீசார் கண்காணித்தனர். அப்போது, டூவீலர்களில், 'ஹெல்மெட்' அணியாமல் வந்த, அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் என, 51 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, 51,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
'இதுபோன்ற தணிக்கை தொடர்ந்து நடத்தப்படும். சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, போக்குவரத்து துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement