5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ரிதேஷ் உடலை தகனம் செய்ய தடை
பெங்களூரு, : 'ஹூப்பள்ளியில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த ரிதேஷின் பிரேத பரிசோதனையை இரண்டு டாக்டர்கள் கொண்ட குழுவினர் மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், விசாரணைக்காக ரிதேஷ் உடல் உறுப்புகளை எடுத்து கொள்ளலாம். அவரின் உடலை தகனம் செய்யாமல், அடக்கம் செய்ய வேண்டும்' என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியில், 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொன்ற ரிதேஷை பிடிக்க, போலீசார் சென்றனர். அப்போது போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால், போலீசார் சுட்டதில், ரிதேஷ் உயிரிழந்தார். இந்த செயலுக்கு மாநிலம் முழுதும் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்தன.
சந்தேகம்
அதேவேளையில், பி.யு.சி.எல்., எனும் மக்கள் சிவில் உரிமைகளுக்கான ஒன்றிய அமைப்பின் டாக்டர் மதுபூஷன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவில், '5 வயது குழந்தையை கொன்ற சம்பவத்தில் ரிதேஷ் குமாரை போலீஸ் என்கவுன்டரில் கொன்றதில் சில சந்தேகங்கள் உள்ளன. எனவே, அவரின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது' என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கு நேற்று தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அரவிந்த் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு வக்கீல் ஆதித்யா சோந்தி வாதிட்டதாவது:
ஹூப்பள்ளியில் 5 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து, கொன்ற சம்பவத்தில் போக்சோ வழக்கு பதிவாகி உள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில், பீஹார் மாநிலத்தை சேர்ந்த ரிதேஷ் குமார் கைது செய்யப்பட்டார்.
குழந்தை கொல்லப்பட்ட இடத்தில் இருந்து 10 கி.மீ., தொலைவில், போலீஸ் என்கவுன்டரில் அவர் கொல்லப்பட்டு உள்ளார்.
இவ்விஷயத்தில் அரசு எடுத்த நடவடிக்கை குறித்து விவாதிக்க தயாராக இல்லை. ஆனாலும், இவ்வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும்.
எங்களுக்கு கிடைத்த தகவலின்படி ரிதேஷின் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை நிறுத்தி, ஆதாரங்களுக்காக அவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சி.ஐ.டி., விசாரணை
அரசு தரப்பு அட்வகேட் ஜெனரல் சசிகரன் ஷெட்டி வாதிட்டதாவது:
இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே அரசு சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, இத்தகைய சம்பவங்களில் இறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்படாது; அடக்கம் செய்யப்படும்.
இறந்தவரின் உடல், அவர்களின் உறவினர்கள் ஒப்படைக்கப்படும். மேல் விசாரணை தேவைப்பட்டால், அடக்கம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படும். எக்காரணத்தை கொண்டும் தகனம் செய்யப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
நீதிபதிகள் கூறியதாவது:
அரசு தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. இதன் மூலம் மனுதாரர் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதே வேளையில், இறந்தவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கும் முன், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, பிரேத பரிசோதனையை, உள்ளூர் மருத்துவமனையின் இரண்டு டாக்டர்கள் கொண்ட குழுவினர் மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வுக்கு தேவையான உறுப்புகளை எடுத்து கொள்ளலாம். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும்.
மனுதாரர் மனு மீது மாநில அரசுக்கு ஆட்பேனை இருந்தால் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படும். இவ்வழக்கு வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
காங்., அரசை கவிழ்க்க மத்திய அரசு... சதி? சித்து, சிவகுமாருக்கு கார்கே எச்சரிக்கை
-
தங்கம் வென்றார் சுருச்சி: உலக துப்பாக்கி சுடுதலில்
-
கொண்டாட்டத்தால் பறிபோன தங்கம்: நிதின் குப்தா ஏமாற்றம்
-
ஷைலி சிங் நம்பிக்கை
-
மணிகா, ஸ்ரீஜா ஏமாற்றம்: உலக டேபிள் டென்னிசில்
-
சிறைச்சாலை முன் கார்களுக்கு தீ வைப்பு: பிரான்சில் மர்ம நபர்கள் தாக்குதல்