அமெரிக்க 'போயிங்' நிறுவன விமானங்களுக்கு சீனா தடை

பீஜிங்,சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க விமான நிறுவனங்களான போயிங் உள்ளிட்டவற்றின் விமானங்களை வாங்குவதை சீனா நிறுத்தி வைத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி என்ற பெயரில் அனைத்து நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார்.

பின் அமெரிக்காவுடன் பேச்சு நடத்திய 60க்கும் மேற்பட்ட நாடுகளின் வரியை நிறுத்தி வைத்தார்.

பேச்சு நடத்த முன் வராத சீனாவுக்கு மட்டும் வரி உயர்வில் விலக்கு அளிக்கவில்லை.

மாறாக சீனாவுக்கான வரியை 145 சதவீதமாக டிரம்ப் உயர்த்தினார். பதிலுக்கு சீனா அமெரிக்கா மீது 125 சதவீத வரி விதித்தது.

ஸ்மார்ட்போன், செமி கண்டக்டர் எனப்படும் மின்னணு சிப்கள், கணினிகள் ஆகிய உயர் தொழில்நுட்ப பொருட்களுக்கான வரியில் இருந்து மட்டும் சீனாவுக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது.

இந்நிலையில் சீனா தன் உள்நாட்டு விமான நிறுவனங்களிடம் அமெரிக்காவில் இருந்து போயிங் மற்றும் பிற நிறுவனங்களின் விமானங்கள் மற்றும் உதிரி பாகங்கள் வாங்குவதை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

தாராள வர்த்தகத்துக்கு பேச்சு

சீன அதிபர் ஷீ ஜின்பிங் வியட்நாம், மலேஷியா, கம்போடியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். மலேஷியாவுக்கு நேற்று சென்ற அவர், தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் தாராள வர்த்தகம் நடத்துவதற்கான ஒப்பந்தம் குறித்து இன்று பேச்சு நடத்த உள்ளார். ஆசியான் அமைப்பின் தலைமை பொறுப்பில் மலேஷியா உள்ளது. இந்த ஒப்பந்தம் இறுதியானால், சீனா மற்றும் இந்தோனேஷியா, தாய்லாந்து உட்பட 10 தென் கிழக்கு ஆசியா நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மிகக் குறைந்த வரியில் நடக்கும்.

Advertisement