ரேஷன் அத்தியாவசிய பொருட்கள் எடை குறைவாக வருவதால் விற்பனையாளர்கள் அவதி

செய்யூர்:சேமிப்புக் கிடங்குகளில் இருந்து நியாய விலைக் கடைகளுக்கு மூட்டையில் அனுப்பப்படும் அத்தியாவசிய பொருட்களின் எடை குறைவாக உள்ளதாக, நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் கூறியதாவது:

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில், 184 நியாய விலைக் கடைகள் செயல்படுகின்றன. செய்யூரில் அமைந்துள்ள சேமிப்புக் கிடங்கில் இருந்து லாரிகள் வாயிலாக அரிசி, சர்க்கரை மற்றும் துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதே போல மதுராந்தகம் வட்டத்தில் செயல்படும், 238 நியாய விலைக் கடைகளுக்கு, சிலாவட்டம் பகுதியில் செயல்படும் சேமிப்புக் கிடங்கில் இருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

லாரிகளில் இருந்து இறக்கும் போது எடை போட்டு இறக்காமல் நேரடியாக இறக்குவதால், 50.65 கிலோ இருக்க வேண்டிய அரிசி மூட்டை, 3 முதல் 7 கிலோ வரை குறைந்து, 47 முதல் 43 கிலோ எடையில் அனுப்பப்படுகிறது.

இதேபோல சர்க்கரை மற்றும் துவரம் பருப்பு போன்ற பொருட்களும் குறைத்து அனுப்பப்படுகின்றன.

மூட்டைகளில் இருந்து எடுக்கப்படும் அரிசி, சர்க்கரை போன்ற பொருட்கள், முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

நியாய விலைக் கடைகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது, மூட்டைகளில் பொருட்களின் எடை குறைவாக இருந்தால், கடை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.

இதனால், கடுமையான மன உளைச்சல் ஏற்படுகிறது.

எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், சேமிப்புக் கிடங்குகளில் ஆய்வு செய்து, எடை குறைத்து மூட்டைகளை அனுப்பும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement