வடாரண்யேஸ்வரர் கோவில் தேர் மண்டபம் ரூ.12 லட்சத்தில் சீரமைக்கும் பணி தீவிரம்

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

பங்குனி உத்திர விழாவின் ஏழாம் நாளில் தேர் திருவிழா நடைபெறும். இந்த தேர் கமலத்தேர் என அழைக்கப்படுகிறது. 55 அடி உயரம் கொண்ட தேர் பாதுகாப்பாக நிறுத்துவதற்காக, திருவாலங்காடு காவல் நிலையம் அருகே மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் தேர் நிறுத்துமிடத்தில் தண்ணீர் தேங்குவதால், தரை பலமிழக்கும் அபாயம் உள்ளதாகவும், இதனால் தேர் சேதமடையும் வாய்ப்புள்ளதாகவும் பக்தர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். அதேபோல், கூரையை சீரமைக்க வேண்டும் எனவும் கூறி வந்தனர்.

கடந்த மாதம் அறநிலையத்துறை சார்பில், 12 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, ஏற்கனவே பதிக்கப்பட்ட பாறை கற்களை அகற்றி, அங்கு மண் கொட்டப்பட்டு தரையை 20 செ.மீ., உயரத்திற்கும் அமைக்கவும், மண்டபத்தின் கூரையை சீரமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

Advertisement