அரசு பள்ளி மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணமாக ரூ.20 வசூலிக்க உத்தரவு பிரின்டர், பேப்பர் வசதி இருந்தும் 'கமிஷனுக்கான' நடவடிக்கையா

மதுரை: மதுரையில் அரசு தொடக்க பள்ளி மாணவர்களிடம் இடை பருவத் தேர்வுகள் வினாத்தாள் கட்டணமாக ரூ.20 வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் தொடக்க கல்விக்கு உட்பட்ட 6, 7, 8 ம் வகுப்புகளுக்கு தற்போது ஆண்டுத் தேர்வு நடக்கிறது. ஏப்.24ல் தேர்வு முடிகிறது. இந்நிலையில் ஏற்கனவே முடிந்த முதல், இரண்டாம் பருவ தேர்வுகளுக்காக வழங்கப்பட்ட வினாத்தாள்களுக்கான கட்டணம் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.20 வசூலித்து சம்பந்தப்பட் வினாத்தாள் ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்க வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு நேற்று 'வாட்ஸ் ஆப்' மூலம் வட்டார கல்வி அலுவலர்கள் (பி.இ.ஓ.,) உத்தரவிட்டுள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு மாணவருக்கு ரூ.20 வீதம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் பிரின்டர், இன்டர்நெட், பேப்பர் உள்ளிட்ட வசதி உள்ளன. ஆண்டு தேர்வுக்கான வினாத்தாள் பி.டி.எப்., வடிவில் 'எமிஸில்' அனுப்பி, பள்ளிகளில் 'பிரின்ட் அவுட்' எடுக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் எவ்வித செலவும் இல்லை. ஆனால் முதல், இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கு மதுரையில் தனியாக வினாக்கள் தயாரிக்கப்பட்டு, அதை தனியார் அச்சகத்தில் கொடுத்து வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒரு வினாத்தாள் ரூ.2 வீதம் (ஒரு பருவத்திற்கு தலா 5 தேர்வுகள்) மாணவர்களிடம் ரூ.20 வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது.

கமிஷனுக்கான நடவடிக்கையா



ஆண்டு தேர்வே பள்ளிகளில் உள்ள பிரின்டர்கள் மூலம் பிரதிகள் எடுத்து நடத்தப்படும்போது, பருவத் தேர்வுகளுக்கு மட்டும் ஏன் தனியாரிடம் கொடுத்து வினாத்தாள் அச்சடிக்க வேண்டும். தனியார் அச்சகத்தில் ஒரு வினாத்தாளுக்கு ரூ.2 செலவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அச்சிடும்போது ரூ.1க்கும் குறைவாகவே செலவாகும். ஆனால் அதிகாரிகள் சிலர் கமிஷனுக்காகவே மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரிக்க முடிவு எடுத்து, தனியார் அச்சகத்தில் அச்சடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதன்மூலம் ரூ.லட்சக்கணக்கில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்க தான் பள்ளிகளுக்கு பிரின்டர், பேப்பர் வழங்கப்பட்டது. ஆனாலும் வசூலுக்காக தனியார் அச்சகத்தில் வினாத்தாள் அச்சடிப்பது தொடர்கிறது என்றனர்.

தொடக்கக் கல்வி அலுவலர் சிவக்குமார் கூறுகையில், இதுபோன்ற உத்தரவு என் கவனத்திற்கு வரவில்லை. இதுகுறித்து விசாரிக்கிறேன் என்றார்.

Advertisement