'டாஸ்மாக்' வழக்கில் முதல் தகவல் அறிக்கை விபரம் தாக்கல் செய்ய உத்தரவு

13

சென்னை : 'டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, ஈ.சி.ஐ.ஆர்., என்ற வழக்கு தகவல் பதிவேடில் குறிப்பிட்டுள்ள, முதல் தகவல் அறிக்கைகளின் விபரங்களை தாக்கல் செய்யுங்கள்' என, அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானது என, அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


இவற்றின் மீதான இறுதி விசாரணை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில், 3வது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிறுவனம் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் விக்ரம் சவுத்ரி, விகாஸ் சிங் ஆகியோர் ஆஜராகி வாதாடியதாவது:


விசாரணையை துவக்கிய அன்றே, அமலாக்கத்துறை நேரடியாக, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை செய்ததன் நோக்கம் என்ன; சோதனைக்கு வந்த நாளில், முதல் தகவல் அறிக்கையை தவிர, வேறு எந்த ஆதாரங்களும், அமலாக்கத்துறை வசம் இல்லை. மத்திய விசாரணை அமைப்புகளுக்கு, தமிழக அரசு வழங்கி இருந்த ஒப்புதல், 2023ம் ஆண்டு ஜூன், 14ல் திரும்ப பெறப்பட்டது.


அவ்வாறு இருக்கும் போது, மாநில அரசின் அனுமதி இல்லாமல், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய முடியாது. எந்த வழக்கின் அடிப்படையில், சோதனை நடத்தப்பட்டது என்பதை, அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை. முதல் தகவல் அறிக்கைகள் விபரங்கள் இல்லாமல், வாதங்களை முன் வைப்பது என்பது இயலாத காரியம். நாட்டில் உள்ள, 29 மாநிலங்களில், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில், ஏதேனும் ஒரு துறையை தேர்ந்தெடுத்து, அமலாக்கத்துறை விசாரணை நடத்த துவக்கினால், அந்த அபாயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் வாதாடினர்.


தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''அமலாக்கத் துறை நடவடிக்கை, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. டாஸ்மாக் நிறுவன பெயர், முதல் தகவல் அறிக்கையில் இல்லை. முறைகேடு தொடர்பாக பதிவான, 42 முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் சோதனை நடத்தியதாக, அமலாக்கத்துறை கூறுகிறது. டாஸ்மாக்கில் ஏதேனும் முறைகேடு நடந்தது தெரியவந்தால், அது தொடர்பாக மாநில அரசு உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்,'' என்றார்.


அப்போது நீதிபதிகள், 'டாஸ்மாக் முறைகேடு புகார் விசாரணைக்கு, அமலாக்கத் துறைக்கு மாநில அரசு உதவலாமே' என, கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''சட்டத்தை மீறி, அமலாக்கத்துறை இவ்வளவு செய்த பின் எப்படி உதவ முடியும்; அமலாக்கத்துறை சோதனை நடந்து கொண்டிருக்கும் போது, டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் வரை மோசடி என, தேசிய கட்சியின் மாநில தலைவர் பேட்டி அளித்துள்ளார். அதற்கு என்ன அர்த்தம்,'' என்றார்.


'டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, ஈ.சி.ஐ.ஆர்., என்ற வழக்கு தகவல் பதிவேடில் குறிப்பிட்டுள்ள, முதல் தகவல் அறிக்கைகளின் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என, அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Advertisement