எச்சரிக்கை பதாகை இன்றி சாலை பணி விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை, ஆரணி ஆற்று மேம்பாலத்தில் இருந்து பெரிஞ்சேரி வரை, 2.6 கி.மீ., துாரம் நான்குவழிச் சாலையாக மாற்ற முடிவெடுக்கப்பட்டு, 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 30 மீ., அகலத்தில், மீடியனுடன் சாலை அமைக்கும் பணி துவங்கியது.

விரிவாக்க பணிகளுக்காக, 50க்கும் மேற்பட்ட மரங்கள், 100க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அகற்றப்பட்டு பணி நடந்து வருகிறது. ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் நடைபெறும் இப்பணியில், வாகன ஓட்டிகளுக்கு தெரியும்படி எச்சரிக்கை பதாகைகள் பெயரவிற்கு இரண்டு இடங்களில் வைத்துள்ளனர்.

இதனால், இரவு நேரங்களில் எந்த பகுதியில் பணிகள் நடக்கிறது என தெரியாமல், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சாலை விரிவாக்க பணிக்காக தோண்டிய ஜல்லிக் கற்கள் மற்றும் மரத்துண்டுகள் இருப்பது தெரியாமல், சில வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.

குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர், சிறு சிறு விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, கலெக்டர் நடவடிக்கை எடுத்து, சாலை விரிவாக்க பணி நடைபெறும் இடங்களில், எச்சரிக்கை பதாகை வைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement