குறுகிய சாலையில் பயணிக்கும் லாரிகளால் சிரமம் குண்ணம்மஞ்சேரி குடியிருப்புவாசிகள் போராட்டம்

பொன்னேரி,:பொன்னேரி - குண்ணம்மஞ்சேரி பகுதிகளுக்கு இடையே ஆரணி ஆறு பயணிக்கிறது. குண்ணம்மஞ்சேரி, ஏலியம்பேடு, புதுவாயல், இந்திரா நகர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம வாசிகள் கல்வி, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு, ஆற்றை கடந்து பொன்னேரிக்கு வந்து செல்கின்றனர்.
இக்கிராமங்களின் போக்குவரத்து வசதிக்காக, 2020ல் 12.30 கோடி ரூபாயில், ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக, குவாரி மண் எடுத்து செல்லும் டிப்பர் லாரிகள், அதிகளவில் இந்த பாலம் மற்றும் குண்ணம்மஞ்சேரியில் உள்ள குறுகிய தெருக்கள் வழியாக பயணிக்கின்றன.
எதிரெதிரே மண் லாரிகள் செல்லும்போது, வீடுகளை உரசியபடி செல்வதால், குடியிருப்புவாசிகள் அச்சத்திற்கு ஆளாகின்றனர். நாள் முழுதும் லாரிகள் சாலைகளில் பயணிப்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் உள்ளது.
காலை - மாலை நேரங்களில் பணிக்கு செல்வோர், பள்ளி கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமப்படுகின்றனர். இதனால், கொதிப்படைந்த குடியிருப்புவாசிகள், நேற்று அவ்வழியாக சென்ற டிப்பர் லாரிகளை மடக்கி, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குடியிருப்புவாசிகளிடம் பேசினர். இதையடுத்து, குடியிருப்புவாசிகள் கலைந்து சென்றனர்.
கனரக வாகனங்கள் குறுகிய தெருச்சாலைகளில் பயணிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி, குண்ணம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள், நேற்று மாலை பொன்னேரி காவல் நிலையம் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.
மேலும்
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண ரூ.500, ரூ.200 கட்டணம்: ஏப்.29 முதல் மே 2 வரை ஆன்லைனில் முன்பதிவு
-
மாமியாரை அம்மிக்குழுவியால் தாக்கிய மருமகன் கைது
-
ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப தெப்பல் உற்சவம்
-
மின்தடையை கண்டித்து மறியல்: 50 பேர் மீது வழக்கு
-
காயமடைந்த மயில் மீட்பு
-
டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பேட்டரி திருடிய 2 பேர் கைது