அதிருப்தியாளர்களை உற்சாகப்படுத்த வாரிய தலைவர் பதவி: ஸ்டாலின் திட்டம்

சென்னை : சட்டசபை, லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால், ஏமாற்றம் அடைந்து, அதிருப்தி மனநிலையில் உள்ள மூத்த நிர்வாகிகளை உற்சாகப்படுத்த, அவர்களுக்கு வாரியத் தலைவர் பதவி வழங்க, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க., ஆட்சி அமைந்து, நான்கு ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 2024 லோக்சபா தேர்தல், போன்றவற்றில் போட்டியிட, சீட்டு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த தி.மு.க., நிர்வாகிகள், மாவட்ட வாரியாக உள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், அமைச்சர் அந்தஸ்து கொண்ட, வாரியத் தலைவர் பதவிகளை எதிர்பார்க்கின்றனர். ஆட்சி முடிய இன்னும் 12 மாதங்களே உள்ளன. எனவே, அதிருப்தி மன நிலையில் உள்ளவர்களை உற்சாகப்படுத்த, வாரியத் தலைவர் பதவி வழங்க, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில், அனைத்து மாவட்டங்களிலும், கோஷ்டி பூசல் இல்லாமல், கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்பதால், அதிருப்தியாளர்களை சரிக்கட்டும் பணியை, தி.மு.க., தலைமை துவக்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக, கட்சிக்கு நீண்ட காலமாக உழைத்தவர்கள், மாவட்டச் செயலர்கள், அமைச்சர்களால் ஓரங்கட்டி வைக்கப்பட்டவர்கள், தேர்தலில் சீட்டு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தவர்வர்கள் என, பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு, மாநில உணவு ஆணையத்தின் தலைவர் பதவி நேற்று வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்து வாரியத் தலைவர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். இதையறிந்து, அதிருப்தியில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் திடீர் உற்சாகம் அடைந்திருப்பதோடு, எப்படியாவது வாரியத் தலைவர் பதவியை பிடிக்கும் நோக்கோடு, தலைமைக்கு சிபாரிசு அழுத்தம் கொடுக்கத் துவங்கி உள்ளனர்.
மாற்று கட்சிகளில் இருந்து பா.ஜ.,வுக்கு வந்த முக்கிய நபர்கள், தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காததால், அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில், 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற, பா.ஜ, மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல் நடவடிக்கையாக, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கப்பட்டு உள்ளது. அடுத்து, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில், அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை, பா.ஜ.,வுக்கு இழுக்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது. இதற்கு முன்னதாக, ஏற்கனவே மாற்று கட்சிகளில் இருந்து பா.ஜ.,வில் இணைந்து, தங்களுக்கு முக்கிய பொறுப்புகள் உள்ளிட்ட முக்கியத்துவம் கிடைக்காததால், அதிருப்தியில் உள்ளவர்களுக்கு, மத்திய அரசின் வாரியங்களில் பதவிகள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக, மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு உள்ள மக்கள் செல்வாக்கு, பா.ஜ.,வில் பங்கேற்ற போராட்டங்கள், கட்சி வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக, நெருக்கமான அமைப்புகளின் வாயிலாக, பா.ஜ., மேலிடம் விபரம் சேகரித்து வருகிறது. அவர்களின் பட்டியல், இம்மாத இறுதிக்குள் டில்லி அனுப்பி முடிவு செய்யப்படும். அதைத் தொடர்ந்து, பொறுப்புகள் வழங்கப்படும் என, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலும்
-
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்
-
கடலுார் மாநகர கவுன்சிலர்கள் அதிருப்தி கூடுதலாகும் எதிரணியினரின் 'பலம்'
-
அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்; விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் பேட்டி
-
பொன்முடி மீது வழக்கு பதிய கடலுார், கள்ளக்குறிச்சியில் புகார்
-
முதியவர் மீது 'போக்சோ'
-
வாலிபர் தற்கொலை