இரவிலும் குழந்தைகளுக்கு அடிக்கடி தண்ணீர் கொடுங்க! சுகாதார துறை அறிவுறுத்தல்

சென்னை : 'கோடை வெயில் தாக்கத்தால், இரவிலும் நீர் சத்து குறைய வாய்ப்பு உள்ளது. எனவே, குழந்தைகளுக்கு அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், காலை, 11:00 முதல் மாலை, 3:00 மணி வரை, தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம். அவ்வாறு சென்றாலும், குடிநீர் பாட்டில், குடை உள்ளிட்டவற்றை, எடுத்து செல்ல வேண்டும் என, ஏற்கனவே பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தால், பகல் போன்று இரவிலும், வெப்ப உஷ்ணம் அதிகமாக காணப்படுகிறது. துாங்கிக் கொண்டிருந்தாலும், வாய், நாக்கு போன்றவை வறண்டு விடுகிறது. எனவே, குழந்தைகளுக்கு இரவிலும், அடிக்கடி நீர் அருந்த கொடுக்க வேண்டும் என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: 'ஏசி' வசதி இல்லாத வீடுகளில், குழந்தைகளுக்கு அடிக்கடி குடிநீர் கொடுப்பதும், அவர்களை தினமும் இரு வேளை குளிக்க வைப்பதும் மிக அவசியம்.
குறிப்பாக, இரவில் துாக்கத்திலேயே, வாய், நாக்கு போன்றவை வறண்டு போகும். பெரியவர்கள் சுதாரித்து தண்ணீர் குடிப்பர். குழந்தைகள், சிறுவர், சிறுமியர் அப்படி தண்ணீர் குடிப்பது கேள்விக்குறி தான். அதனால், குழந்தைகள் துாங்கும் போதும், குறிப்பிட்ட இடைவெளியில், அவர்களுக்கு குடிநீர் கொடுப்பது அவசியம்.
குடிநீர் கொடுக்க மறக்கும் போது, தசைப்பிடிப்பு, தலைவலி, தலைச்சுற்றல், சிறுநீர் கசிவு போன்ற அறிகுறிகள் ஏற்படும். ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதுடன், மூளை, சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளும் பாதிக்கப்படும்.
எனவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, போதுமான இடைவெளியில், தாகம் இல்லையென்றாலும், குடிநீர் அருந்த வேண்டும். தினமும் இரு வேளை குளிப்பதும் அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும்
-
பொது 4 விரைவு ரயில்களில் கூடுதல் 'ஏசி' பெட்டிகள்
-
கழிவில் இருந்து மணல், ஜல்லியை பிரித்து கட்டுமான பணிக்கு விற்கிறது மாநகராட்சி
-
தொழில் துவங்குவது என்றால் சும்மாவா? புரிய வைத்த புனே மாவு மில் உரிமையாளர்
-
இந்திய கட்டுமான வல்லுனர் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
-
போதையில் ரவுடியிசம் 5 பேர் கைது
-
லக்னோ அணியில் மயங்க்