கழிவில் இருந்து மணல், ஜல்லியை பிரித்து கட்டுமான பணிக்கு விற்கிறது மாநகராட்சி

சென்னை, கட்டுமான கழிவில் இருந்து மணல், ஜல்லிகளை பிரித்தெடுக்கும் மாநகராட்சி, அவற்றை கட்டுமான பணிகளுக்காக, தனியாருக்கு விற்று வருகிறது. மணல் - 900 ரூபாய்; ஜல்லி - 650 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

சென்னையில் கண்ட இடங்களிலும் கட்ட கழிவு கொட்டுவதை தடுக்கும் வகையில், கட்டட கழிவு குறித்த வழிகாட்டு நடைமுறைகளை அறிவித்துள்ளது. இதன்படி, பொது இடத்தில் கழிவை கொட்டினால், டன்னுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

ஒரு டன்னுக்கு கீழ் உள்ள கட்டட கழிவை மாநகராட்சி கட்டணமின்றி எடுத்துக் கொள்ளும். அதற்கு மேல், 20 டன் வரையிலான கழிவை, மண்டல அலவிலான மையங்களில், ஒப்படைக்கலாம். அதற்கு, 800 ரூபாய் கட்டணம். மாநகராட்சி எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், டன்னிற்கு, 3,300 ரூபாய் செலுத்த வேண்டும்.

இதில், 20 டன்னுக்கு மேல் என்றால், குப்பைக்கிடங்கில் சம்பந்தப்பட்ட நிறுவனமே ஒப்படைக்க வேண்டும். இதற்கு பராமரிப்பு கட்டணம், 800 ரூபாய் செலுத்தே வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, வழிகாட்டு விதிமுறையில் உள்ளது. இந்த நடைமுறை, 21ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், பெருங்குடி, கொடுங்கையூர் கட்ட கழிவு மறுசுழற்சி ஆலைகள் அமைக்கப்பட்டு, 2022ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்த ஆலையில், இதுவரை, 4.85 லட்சம் டன் கழிவு மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது.

இதில், 6 மி.மீ., மணல், 12 மற்றும் 24 மி.மீ., ஜல்லி கற்கள் உருவாக்கப்படுகிறது. இவை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த உகந்தது என, சென்னை ஐ.ஐ., அங்கீகார சான்றிதழ் வழங்கி உள்ளது. அதன் வாயிலாக, கட்டுமான பில்லர் மற்றும் பூச்சு வேலைகளுக்கு, மணல் டன்னுக்கு, 900 ரூபாய்; ஜல்லி டன்னுக்கு, 650 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை பெருங்குடி ஆலையில், மறுசுழற்சி பணிகளை, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் நேற்று ஆய்வு செய்தார். மறு சுழற்சி பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அபராதம் விதிப்பது

எங்கள் நோக்கமல்ல

''பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் தினமும், 3,000 டன் வரை மறுசுழற்சி செய்யும் வசதி உள்ளது. ஆனால், மாநகராட்சியில், 1,000 டன்தான் சேகரமாகிறது.

பொது இடங்களில் கட்டட கழிவு கொட்டினால், டன்னுக்கு, 5,000 அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் விதிப்பது மாநகராட்சியின் நோக்கமில்லை. தவிர்க்க முடியாத காரணங்களால், அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ந்து கட்டட கழிவு கொட்டினால், போலீசில் புகார் அளித்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை முழுதும் கட்டட பணியை சேகரிக்கும் பணியில், 566 பணியாளர்களும், 201 வாகனங்களும் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற திட்டம், பெங்களூரு, ஐதராபாத் போன்ற மாநகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக செயல்படுத்தி உள்ளோம்.

- ஜெயசந்திர பானு ரெட்டி,

மாநகராட்சி கூடுதல் கமிஷனர்.

Advertisement