பயன்படுத்தாத கணக்குகளில் பண மோசடி: வங்கிகளுக்கு போலீசார் 'அலெர்ட்'

1

சென்னை : 'மூன்று மாதங்களுக்கு மேலாக பயன்படுத்தாமல் இருக்கும், வங்கி கணக்குகள் வாயிலாக பண மோசடி நடப்பதால், வங்கி அதிகாரிகள் உஷாராக இருக்க வேண்டும்' என, மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


சமீபத்தில், மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையக போலீசார், சென்னையில் செயல்பட்டு வந்த மோசடி கும்பலை சேர்ந்த, எட்டு பேரை கைது செய்தனர். இவர்கள், சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த பாய்ஸ்கான், 58, என்பவரின் தலைமையில் செயல்பட்டு வந்தனர். மலேஷியாவில் இருந்து, 'ஆன்லைன்' வாயிலாக, 'டிஜிட்டல் கைது' செய்து, பண மோசடி செய்யும் கும்பல்களுக்கு, வங்கி கணக்குகளை வாடகைக்கு விடும் தொழிலில், இவர்கள் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.


தொடர் விசாரணையில், இக்கும்பலை சேர்ந்தோர், மாநிலத்தின் பல பகுதிகளில் முகவர்கள் போல செயல்படுகின்றனர். இவர்கள், அரசின் நல உதவிகளை பெற்றுத் தருவது போல, தினக்கூலி தொழிலாளிகள் உள்ளிட்டோரை மூளைச்சலவை செய்து, 1,000க்கும் மேற்பட்டோரின் வங்கி கணக்குகளை அபகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, சைபர் குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:




தற்போது தமிழகத்திற்கு, மலேஷியாவில் இருந்து தான் பண மோசடிக்கான அதிக அழைப்புகள் வருகின்றன. அங்கு பதுங்கியுள்ள கும்பல்கள், மூன்று மாதங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளை, பண மோசடிக்கு அதிகம் பயன்படுத்தி வருவது தெரியவருகிறது. அதில், குறைந்தபட்ச சேமிப்பு தொகை இல்லாவிட்டாலும், அதை செலுத்தி விடுகின்றனர்.


இதனால், இத்தகைய வங்கி கணக்குகளில் திடீரென பெரும் தொகைக்கு பணப்பரிவர்த்தனை நடக்கும் போது, அதை நிறுத்தி வைக்க வேண்டும். அதன் மீது சந்தேகம் எழுந்தால், எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என, வங்கி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். கைதானவர்கள் தெரிவித்த வாடகை வங்கி கணக்குகள் குறித்த விபரங்களையும் அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement