ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பு இல்லை  : செவிலியர் சங்கத்தினர் தீர்மானம்

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் நடந்த எம்.ஆர்.பி., செவிலியர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

ராமநாதபுரத்தில் எம்.ஆர்.பி., செவிலியர்கள் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. சங்க மாவட்டத்தலைவர் எஸ்.வினோதினி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் விஜயராமலிங்கம் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு சந்திரலேகா அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.

மாவட்ட செயலாளர் தனலட்சுமி, அரசு ஊழியர் சங்க மநில செயற்குழு உறுப்பினர் பாண்டி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அப்துல் நஜ்முதீன், எம்.ஆர்.பி., செவிலியர் சங்க நிர்வாகிகள் லதா, பாத்திமா, தீபலட்சுமி, முத்துமாரி, அனிஸ்பாத்திமா, ஹமீது அப்துல் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றனர்.

நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பாதுகாவலர்கள் இல்லாத நிலை உள்ளது. செவிலியர்களுக்கு உடை மாற்றும் அறை, கழிப்பறை வசதிகள் இல்லாத நிலை உள்ளது.

பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்த செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பாதுகாப்பற்ற கட்டடங்களை புனரமைப்பு செய்ய வேண்டும்.

எம்.ஆர்.பி., செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆரோக்கிய பிரமிளா நன்றி கூறினார்.

Advertisement