திருநங்கையருக்கு 2 தங்கும் இல்லம் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

சென்னை:''சென்னையில் திருநங்கையருக்கு, இரண்டு தங்கும் இல்லங்கள் அமைக்கப்படும்,'' என, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

 தமிழகத்தில் பள்ளிகளில் செயல்படும், 43,131 சத்துணவு மையங்களில், 42.71 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். தாளிதம், காய்கறிகளுக்காக வழங்கப்படும் தொகை, முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நபர் ஒருவருக்கு 1.79 ரூபாய் என்பது 2.01 ரூபாயாகவும்; ஆறு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 2.11 ரூபாயானது, 2.71 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு, ஆண்டுக்கு, 61 கோடியே 61 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்

 திருநங்கையருக்கு சென்னையில், 'அரண்' என்ற பெயரில், 64 லட்சம் ரூபாயில், இரண்டு தங்கும் இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக அமைக்கப்படும். இந்த இல்லத்தில், 25 திருநங்கையர் தங்க வசதிகள் ஏற்படுத்தப்படும்

 வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 2,000 பெண்களுக்கு, உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும், வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க, 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்

 பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, 1 கோடி ரூபாயில், 20 கருத்தரங்குகள் நடத்தப்படும்

 குழந்தைகள் மையத்திற்கு வரும், 2 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின், முன்பருவ கல்வி கற்றல் திறனை மதிப்பீடு செய்து, பள்ளிக்கு செல்ல ஆயத்தப்படுத்த, 'செயலி' உருவாக்கப்படும். இதை பயன்படுத்துவது குறித்து அங்கன்வாடி பணியாளர்களுக்கு, 1 கோடி ரூபாயில் பயிற்சி அளிக்கப்படும்

 ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் குறித்த செயல்பாடுகளை, மக்கள் அறிந்து கொள்ள, கட்டணமில்லா தொலைபேசி மற்றும் ஐ.வி.ஆர்.எஸ்., தொழில்நுட்ப வசதி 1.50 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும்

 பச்சிளம் குழந்தைகளின் உடல் நலனை காக்க, தவறான பாலுாட்டும் முறைகளால் ஏற்படும் பச்சிளம் குழந்தைகளின் மரணங்களை தடுக்க, கர்ப்பிணியர் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்

 ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் வரும் அனைத்து அலுவலகங்களும், 9.16 கோடி ரூபாயில் டிஜிட்டல் மயமாக்கப்படும்

 கடலுார் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், தர்மபுரி மாவட்டம் ஏரியூர், கடத்துார் தாலுகாக்களில், 1.53 கோடி ரூபாயில் புதிய குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும்

 மயிலாடுதுறை மாவட்டத்தில், 46 லட்சம் ரூபாயில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் அமைக்கப்படும். சென்னை மாவட்ட திட்ட அலுவலகம், வட சென்னை, தென்சென்னை என, இரண்டாக பிரிக்கப்படும்

 குழந்தைகள் நலனை காப்பதில், திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு, 'முன்மாதிரியான சேவை விருது' 4 லட்சம் ரூபாயில் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

Advertisement