மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.131 கோடியில் உபகரணங்கள்

சென்னை:சிறப்பு முகாம்கள் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு, 131.25 கோடி ரூபாயில் உதவி உபகரணங்கள் வழங்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

சட்டசபையில் நேற்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் சார்பில் பதிலளித்து, அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழகம் முழுதும் சிறப்பு முகாம்கள் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு, 131 கோடியே, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்படும்.

தசைச்சிதைவு நோய், முதுகு தண்டுவட பாதிப்பால் கை, கால்கள் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, 'பேட்டரி'யால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம், பிற வகைகளால் கை, கால்கள் பாதிக்கப்பட்டு, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 'நீயோ போல்ட்' போன்ற உபகரணங்கள் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள, 600 மாற்றுத்திறனாளிகளுக்கு, 6.87 கோடி ரூபாயில் விரிவுப்படுத்தப்படும்.

பல்வகை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, இயற்கை உபாதைகளை கழிக்கும் வகையிலான சக்கர நாற்காலி வழங்கும் திட்டம், 1,000 மாற்றுத்திறனாளிகளுக்கு, 1.20 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்.

மூளை முடக்குவாதம் உள்ளிட்ட குறைபாடுகளால், இரு கால்கள் பாதிப்படைந்த, 600 மாற்றுத்திறனாளிகளுக்கு, 6.30 கோடி ரூபாயில், மூன்று சக்கர வாகனமாகவும் பயன்படுத்தக்கூடிய, பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர்களின் மகன், மகள் திருமணத்திற்கான உதவித் தொகை, 2,000த்தில் இருந்து, 5,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர்கள் மரணம் அடைந்தால், ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, 17,000 ரூபாயிலிருந்து, 30,000 ரூபாயாக அதிகரிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் பணிகளை துரிதப்படுத்த, ஒப்பந்த நிறுவனம் ஈடுபடுத்தப்படும்.

இதற்காக, 86 லட்சம் ரூபாய் செலவிடப்படும். 10 ஆண்டுகளுக்கு முன், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, மீண்டும் புதிய மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.

மூளை முடக்குவாதம், தசை சிதைவு நோய், புறஉலக சிந்தனையற்ற மதி இறுக்கத்தால், 40 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட, 2,000 மாற்றுத்திறனாளிகள் அல்லது பெற்றோர்களுக்கு, 1.30 கோடி ரூபாயில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் அறிவித்தார்.

Advertisement