ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை பற்றி விவாதம் சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்த சதீஷ் விருப்பம்

பெலகாவி ; ''ஜாதி கணக்கெடுப்பு அறிக்கையை செயல்படுத்த, அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். இதற்காக சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது,'' என பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.

பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை குறித்து விவாதிக்க, சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அறிக்கை விஷயத்தில் யாருக்கு குழப்பம் உள்ளதோ, அவர்கள் சட்டசபையில் விவாதிக்கலாம்.

இது குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டியுள்ளது. எனவே, சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்த வேண்டும். இது தவிர சிறந்த வழி, வேறு எதுவும் இல்லை.

ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை, அரசியல் ரீதியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நமது மாநிலத்தில் வெறும் 1,000 ஓட்டுகள் மட்டுமே உள்ள சமுதாயத்தவரும், எம்.எல்.ஏ.,வாக உள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும், 70,000 க்கும் மேற்பட்ட சமுதாய தலைவர்கள் ஏன் பயப்பட வேண்டும்.

சிறப்பு சட்டசபையை கூட்டி, நான்கு நாட்கள் விவாதிக்க வேண்டும். அதில் உறுப்பினர்கள் தங்களின் கருத்தை, ஆலோசனைகளை கூறட்டும். குறை, நிறைகளை விவரிக்கட்டும். அதன்பின் அரசு முடிவு செய்யும்.

பெலகாவியில் நாளை (இன்று) பா.ஜ., மக்கள் ஆக்ரோஷ யாத்திரை நடத்துகிறது.

பால் விலை உயர்வுடன், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராகவும் பா.ஜ., போராட்டம் நடத்தட்டும். நாங்கள் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இருக்காது.

பால் விலை உயர்வு குறித்து, மக்கள் ஆட்சேபிக்கவில்லை. பா.ஜ.,வினர் ஆக்ரோஷம் அடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு நன்மை தரும் விஷயத்தில், எதிர்க்கட்சியினர் ஆக்ரோஷம் அடைவது ஏன்.

மஹாராஷ்டிரா அணைகளில் இருந்து, கர்நாடகாவுக்கு தண்ணீர் திறந்து விடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

அம்மாநிலத்தவர் கிருஷ்ணா ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விட்டால், கர்நாடகாவும் ஜத் தாலுகாவுக்கு தண்ணீர் திறந்து விடும். இது குறித்து பேச்சு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement