தேர்தல் கூட்டணி பற்றி பேசக் கூடாது: கட்சியினருக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

14


செங்கல்பட்டு: ''தி.மு.க.,வை வீழ்த்துவதே நோக்கமாக இருக்க வேண்டும். தேர்தல் கூட்டணி தொடர்பாக சமூகவலைதளத்தில் தொண்டர்கள் ஏதும் கருத்து தெரிவிக்க வேண்டாம்'' என தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டில் நடந்த பா.ஜ., கட்சி கூட்டத்தில், நயினார் நாகேந்திரன் பேசியதாவது:

அ.தி.மு.க., உடன் கூட்டணியில் நாம் இருக்கிறோம். கூட்டணி பேச்சுவார்த்தைகள் எல்லாம் முடிந்து யாருக்கு எத்தனை சீட் என்பதை உறுதி செய்த பிறகு தான் சொல்ல முடியும். கூட்டத்திற்கு வந்து இருக்கும் பொறுப்பாளர்கள் தேர்தல் கூட்டணி பற்றி, நாம் யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை.




கூட்டணி பற்றி அமித்ஷா, இ.பி.எஸ்., பேசி கொள்வார்கள். பேஸ்புக், டுவிட்டரில் (எக்ஸ் தளம்), அது எப்படி, இது எப்படி என்று தயவு செய்து யாரும் கருத்துகள் சொல்ல வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன். இந்த காலகட்டத்தில் சனாதனத்திற்கு எதிரான ஆட்சி, ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சி தமிழகத்தில் இருக்க கூடாது என்பது தான் நமது குறிக்கோளாக, லட்சியமாக இருக்க வேண்டும்.


வேறு எந்த சிந்தனையிலும் நாம் ஈடுபட கூடாது. பொறுப்புள்ள அனைவரும் இனி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான ஆட்சி நடக்கிறது. அமைச்சர் பொன்முடி, பேசியது மிகவும் மோசமானது. நீதிமன்றமே கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது. அதற்காக மாநிலம் முழுவதும் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.


அதற்கான அறிவிப்புகள் வெகு விரைவில் வரும். நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாவும், ராகுலும் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதில் ரூ. 2 ஆயிரம் கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளது. நமது எதிரி சாதாரணமான ஆள் கிடையாது. ஆளுங்கட்சியாக இருக்கிறது. கூட்டணி குறித்து யாரும் பேசக் கூடாது. தலைமை பார்த்து கொள்ளும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.

Advertisement