அர்ச்சனை தட்டு விற்பனையில் அட்டூழியம் அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியம்

ஹிந்து சமய அறநிலையத்துறை, தமிழகத்தில் இந்து சமய கோவில்களின் வளர்ச்சிக்காக 1960ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கோவில்கள் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, ஹிந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை, பழனி என 11 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் பழமையான புகழ்பெற்ற புராதன கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்து, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது. இதற்காக கோவில் நிலங்களின் குத்தகை, கடை வாடகை, பூஜை பொருட்கள் விற்பனை, பிரசாதம், வாகன பார்க்கிங், காலணி பாதுகாப்பு உள்ளிட்ட பல இனங்கள் வாயிலாக வருவாய் கிடைக்கிறது.

அதன்படி, விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் பிரசாத கடையில், அர்ச்சனை தட்டு 80 ரூபாய்க்கு அடாவடியாக விற்பனை செய்யப்படுகிறது. அதில், ஒரு தேங்காய், இரு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, சூடம், ஒரு துண்டு பூ மட்டுமே உள்ளது.

இதற்கான தொகை அதிகபட்சமாக 35 முதல் 45 வரை மட்டுமே இருக்கும் நிலையில், 30 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் பெறப்படுகிறது. மன நிம்மதி தேடி கோவிலுக்கு வருவோர், அடாவடி வசூலை கண்டுகொள்வது இல்லை.

தட்டிக்கேட்கும் சிலரும், அரசுக்கு சொந்தமான கோவில் என்பதால் வீண் பிரச்னை என ஒதுங்கிச் செல்லும் அவலம் உள்ளது. மாவட்டத்தில் இதுபோல் ஏராளமான கோவில்கள் உள்ளதால், அறநிலையத்துறை நிர்ணயித்த கட்டணத்தை விட அடாவடியாக வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரனிடம் கேட்டபோது, 'அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் அர்ச்சனை தட்டு 50 ரூபாய் மட்டுமே விற்பனை செய்ய விதிமுறை உள்ளது. கூடுதல் கட்டணம் பெறுவோர் மீது புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement