பயிர்களுக்கு இன்சூரன்ஸ் பணத்திற்காக விவசாயிகள் காத்திருப்பு

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு உள்ளிட்ட ஊர்களில் அதிக நெல் விவசாயம் நடக்கிறது. இங்கு பெரும்பாலும் நெல் பயிருக்கு ஏற்ற தண்ணீர் வசதி கிடைக்கிறது. ஆனால்
சிவகாசி, விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, பரளச்சி உள்ளிட்ட ஊர்களில் தண்ணீர் பிரச்சனை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் காலம் கடந்த பருவ மழை, கிருதுமால் ஆற்றில் தாமதமாக தண்ணீர் திறப்பு, நிலையூர், கம்பிக்குடி கால்வாயில் போதிய நீர் வரத்து இன்மை, குல்லூர்சந்தை, கோல்வார்பட்டி அணைகளில் கழிவுநீர் கலப்பு, ஆறுகள் தூர்வாராமல் இருப்பது உள்ளிட்ட பாதிப்பால் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் நெல் விவசாயம் அடியோடு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பாரத ஸ்டேட் வங்கி சுமார் 1 லட்சம் ஏக்கர் வரை நெல் பயிருக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டது.
ஆனால் பாதிப்பு முழு அளவு இருப்பது தெரிந்தும் இன்றளவும் விவசாயிகளுக்கு அதற்கான இழப்பீடு வந்து சேரவில்லை. சரியான கணக்கெடுப்பு நடத்தாமல் தொடர்ந்து குழப்ப நிலையில் இருந்து வருகிறது. மாதந்தோறும் நடக்கும் விவசாய சங்க கூட்டங்களிலும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பிரச்சனைகளை விவசாயிகள் கேள்வி எழுப்பினாலும் தீர்வு காணப்படாமல் கண் துடைப்புக்காகவே கூட்டம் நடந்து வருகிறது.
இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நெல் பயிருக்கான பாதிப்பிற்கு இன்சூரன்ஸ் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.
தொடர்ந்து இது சம்பந்தமான அலுவலகங்களுக்கு அலைந்த வண்ணம் உள்ளனர். நெல் பயிருக்கு இன்சூரன்ஸ் வழங்கிய பின்பு தான் கடலை, மிளகாய், பருத்தி போன்ற பயிர் பாதிப்புகளுக்கு கணக்கெடுக்கப்பட உள்ளது.
பணம் வரும் என, விவசாயிகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக நம்பிக்கை இழந்து போனதால் இந்தாண்டும் இன்சூரன்ஸ் பணம் வராது என்ற மனநிலையில் விவசாயப் பணிகளை செய்வதில் சுணக்கம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ராம் பாண்டியன்: தமிழக அரசும், விருதுநகர் மாவட்ட நிர்வாகமும் மெத்தன போக்குடன் செயல்படுவதால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உரிய முறையில் இன்சூரன்ஸ் பணம் பெற்று தராதது அரசின் குற்றமே. மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தும் விவசாயிகள் நலனில் அக்கறை கொள்வது இல்லை. விவசாயிகளை இந்த அரசு வஞ்சித்து வருகின்றது.
ஒரு பக்கம் இயற்கை பேரிடர்களால் விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட்டு நொந்து கிடக்கும் விவசாயிகளுக்கு அரசும் தன் பங்கிற்கு பாராமுகம் காட்டுவது விவசாயிகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது.