வருமானம் குறைவால் முதல்வர் மருந்தகத்தைஒப்படைப்பதாக துணைப்பதிவாளரிடம் மனு




நாமக்கல்:'போதிய வருமானம் இல்லாததால், முதல்வர் மருத்தகத்தை திரும்ப ஒப்படைக்கிறோம்' என, தொழில் முனைவோர்கள், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க துணைப்பதிவாளர் இந்திராவிடம் மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த பிப்., 24ல், அரசு, தனியார் என, மொத்தம், 27 'முதல்வர் மருந்தகம்' தொடங்கப்பட்டது. அதில், 17 கடைகளை, அரசே நடத்துகிறது. மீதமுள்ள, 10 கடைகள் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் தனியாருக்கு வழங்கப்பட்டன.
இந்நிலையில், 'முதல்வர் மருந்தகத்தை தொடர்ந்து நடத்த முடியவில்லை' எனக்கூறி, தொழில் முனைவோர்களான, நாமக்கல்லை சேர்ந்த தினகரன், 64, குமாரபாளையம் தமிழரசன், 27, வெப்படை தினேஷ், 25, ஆகியோர், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க துணைப்பதிவாளர் இந்திராவிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:


கடந்த பிப்., 24ல், 'முதல்வர் மருந்தகம்' தொடங்கினோம். இரண்டு மாதத்தில் வெறும், 14,903 ரூபாய்க்கும் மட்டுமே மருந்துகள் விற்பனையாகி உள்ளன. துவக்கத்தில் மருந்து வாங்க வந்தவர்கள், தற்போது ஆர்வம் காட்டவில்லை. போதிய லாபம் இல்லாததால், தொடர்ந்து முதல்வர் மருந்தகத்தை நடத்த எங்களால் முடியவில்லை. அதனால், கடைகளை திரும்ப ஒப்படைக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாமக்கல்லை சேர்ந்த தினகரன் கூறுகையில், ''முதல்வர் மருந்தகம் நல்ல திட்டம் தான். ஆனால், தினமும், 30 ரூபாய் முதல், 300 ரூபாய் என்ற அளவிற்கே விற்பனையாகிறது. கடை வாடகை, 15,000 ரூபாய், மின் கட்டணம், 3,000 முதல், 4,000 ரூபாய், ஆள் சம்பளம் என, செலவாகிறது. நஷ்டத்திற்கு கடையை நடத்த முடியாது. அதனால், முதல்வர் மருந்தகத்தை திரும்ப ஒப்படைத்துவிட்டோம்,'' என்றார்.
இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு கூறுகையில், ''முதல்வர் மருந்தகம் எடுத்தவர்களுக்கு, மூன்று லட்சம் ரூபாய் மானியம் வழங்கி உள்ளோம். 206 வகையான, 'ஜெனிரிக்' மருந்துகள் விற்பனை செய்து வருகிறோம். மேலும், 745 வகையான மருந்துகள், 'சப்ளை' செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடையை திரும்ப ஒப்படைக்க முடியாது. காரணம், அக்ரிமென்ட் போடப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement