ஓட்டல்கள், இறைச்சிக் கடைகளில் அடிக்கடி சோதனை அவசியம்; மறுமுறை பயன்படுத்தும் சமையல் எண்ணெய்யால்- ஆபத்து

கூடலுார்: மாவட்டத்தில் ஓட்டல்கள், இறைச்சிக் கடைகளில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணைய்யை மறுமுறை தொடர்ந்து பயன்படுத்துவதால் உணவுகள் விஷமாக மாறி ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஓட்டல்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து உணவு வகைகளை வீட்டிற்கே வரவழைத்து சாப்பிடுவதும் அதிகரித்துள்ளது. சில ஓட்டல்களில் சிக்கன், மட்டன், அப்பளம் மற்றும் சமையல் பயன்பாட்டிற்காக எண்ணெய்யை ஒருமுறை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதன்பின் அவர்கள் குறைந்த விலைக்கு சில ஓட்டல்களுக்கு விற்பனை செய்து விடுகின்றனர். இதை வாங்கி பயன்படுத்தும் ஓட்டல்களில் உணவுகளின் தரம் கேள்விக்குறியாகி விடுகிறது. மேலும் சிக்கன் பொரிப்பதற்கு தொடர்ந்து திரும்ப, திரும்ப பயன்படுத்துவதால் உணவு விஷமாக மாறும் அபாயம் உள்ளது.

கூடலுாரில் சில மாதங்களுக்கு முன்பு உணவு பாதுகாப்புத் துறையினர் ஓட்டல்கள், இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் பழைய மீன்கள், கலர் சாய பொடி கலந்த சிக்கன், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த பாக்கெட் உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இருந்த போதிலும் தொடர்ந்து சுகாதாரமற்ற எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கடையில் சோதனை செய்து கொண்டிருக்கும்போதே அடுத்த கடை உரிமையாளர்களுக்கு தகவல் சென்று விடுவதால் கடையை மூடி எஸ்கேப் ஆகி விடுகின்றனர். அதனால் அடிக்கடி ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறையினர் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுராஜா, இந்திய நுகர்வோர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர், கூடலுார்: ரோட்டோரத்தில் விற்பனை செய்யும் சிக்கன் கடைகள் மற்றும் ஓட்டல்களில் ஒருமுறை பயன்படுத்தும் எண்ணையை மீண்டும் மீண்டும் சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் உணவு வகைகள் விஷமாக மாறுகிறது. இதனை உணவாக சாப்பிடும் மக்கள் உடனடியாக பாதிக்கப்படுவதில்லை.

சிறிது சிறிதாக உடலில் ஏற்படும் மாற்றத்திற்குப் பின் உயிரிழக்கும் ஆபத்தும் உள்ளது.

அதனால் கடைகளில் ஒரு முறை பயன்படுத்தும் எண்ணைய்யை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாதிரி எடுத்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மேலும் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணைய்யை ஓட்டல்களில் இருந்து பயோ டீசலுக்காக வாங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement