உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

10

சென்னை: ''மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உள்ளாட்சியில் பதவிகளை பெறுவர்'' என சட்டசபையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி வழங்கும் மசோதா தாக்கல் செய்த பிறகு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் கவுன்சிலர் பதவி வழங்கும் சட்ட முன்வடிவை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் 493 மாற்றுத்திறனாளிகள் அரசுப் பணி பெற்றுள்ளனர். அவர்களுக்கான நலத்திட்டங்களுக்கு இந்த நிதியாண்டில் ரூ.1,432 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.



மாற்றுத்திறனாளிகள் நியமன முறையில் தங்களுக்கான வாய்ப்புகளையும், பிறப்புரிமையையும் சமமாகப் பெற புதிய சட்ட மசோதா உதவும். 12 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் கிடைக்கும். இந்த சட்ட முன்வடிவை கொண்டு வந்ததை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்.


மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உள்ளாட்சியில் பதவிகளை பெறுவர். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் குரல் ஒலிக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் தமிழக அரசு செயல்படுகிறது. குரலற்றவர்களின் குரலாக தி.மு.க., ஆட்சி உள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement