அர்ச்சனை தேங்காயால் விபரீதம்: உண்டியலில் காணிக்கை சேதம்

விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் பக்தர்கள் உடைத்த தேங்காயில் இருந்து வெளியேறிய நீர் உண்டியலில் தேங்கி காணிக்கை ரூபாய் நோட்டுகள் சேதமடைந்ததால் பரபரப்பு நிலவியது.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், கடந்த 11ம் தேதி, பங்குனி உத்திர விழா நடந்தது. கும்பாபி ேஷக திருப்பணி நடப்பதால், பங்குனி உத்திர விழா விசேஷமாக நடக்காத நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அப்போது, அர்ச்சனை தட்டில் இருந்த தேங்காயை, சுவாமி சன்னதிக்கு முன்புறம் பக்தர்கள் உடைத்துச் சென்றனர். கூட்ட நெரிசலில் தேங்காய் தண்ணீர் முழுதும், அங்கிருந்த உண்டியலில் தேங்கியுள்ளது.

இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் நேற்று உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி, பகல் 11:00 மணிக்கு மேல் துவங்கியது. அப்போது, குறிப்பிட்ட அந்த உண்டியலை திறந்தபோது, ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தேங்காய் நீரில் ஊறிய நிலையில், ரூபாய் நோட்டுகள் சேதமடைந்த நிலையில் இருந்தன. 50 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை, வெயிலில் உலர வைத்து, பின்னர் எண்ணும் பணி நடந்தது.

அதன்படி, நிரந்தர உண்டியல்கள் 8, தற்காலிக உண்டியல்கள் 6 உட்பட 14 உண்டியல்களில் 22 லட்சத்து 95 ஆயிரத்து 46 ரூபாய் ரொக்கம், 10 கிராம் தங்கம் மற்றும் 1.84 கிலோ வெள்ளிப்பொருட்கள் இருந்தன.

ஆய்வாளர் பிரேமா, செயல் அலுவலர் பழனியம்மாள் உட்பட பணியாளர்கள், தன்னார்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

பக்தர்கள் வேதனை

பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் தாமாக முன்வந்து, காணிக்கை செலுத்துகின்றனர். அவற்றை பாதுகாப்பாக கையாள முடியாமல், சேதப்படுத்தியது பக்தர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் முறையான விசாரணை நடத்தி, அலட்சியமாக பணிபுரிந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement