என்.எல்.சி., சுரங்க விரிவாக்க பணியை தடுத்து கிராம மக்கள் போராட்டம்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த கரிவெட்டியில் நெய்வேலி என்.எல்.சி., இரண்டாவது சுரங்க விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த கரிவெட்டி, முத்துகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதி களில் நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிலங் கள் கையகப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் சுரங்க விரிவாக்கப் பணியை என்.எல்.சி., மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கையகப்படுத்திய நிலங்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மாற்றுக் குடியிருப்பு மற்றும் வேலைவாய்ப்பு வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று காலை 11:00 மணிக்கு 50க்கும் மேற்பட்ட மக்கள் கரிவெட்டியில் கிராமத்திற்கு செல்லும் சாலையை துண்டித்து விரிவாக்கப் பணியை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக கூறி சமாதானம் செய்தனர். இதனையேற்று கிராம மக்கள் மதியம் 1:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement