காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்க பரூக் அப்துல்லா ஆதரவா; உளவுத்துறை முன்னாள் தலைவர் பரபரப்பு தகவல்

5


புதுடில்லி: காஷ்மீரில் சிறப்பு சட்டத்தை நீக்க அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ரகசியமாக ஆதரவு அளித்ததாக, 'ரா' உளவுப்பிரிவின் முன்னாள் தலைவர் ஏஎஸ் துலாத் எழுதிய புத்தகத்தில் கூறியுள்ளார். இதற்கு பரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்து உள்ளார்.


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு கடந்த 2019 ம் ஆண்டு ரத்து செய்தது. மேலும் காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின. காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்துடன் கூடிய மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் உமர் அப்துல்லா ஆகியோர் தனி இயக்கம் ஒன்றை ஆரம்பித்தனர். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இருவரும் தடுப்புக் காவலில் ஏழு மாதங்கள் வைக்கப்பட்டு இருந்தனர்.


இந்நிலையில், ' ரா' உளவுத்துறையின் முன்னாள் தலைவர் ஏஎஸ் துலாத் "The Chief Minister And The Spy" என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.


அதில் துலாத் கூறியுள்ளதாவது: காஷ்மீர் குறித்தும், 370 வது சட்டப்பிரிவு குறித்தும் பா.ஜ., தனது நோக்கங்களை என்றைக்கும் மறைத்தது கிடையாது. இந்த விஷயத்தில் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட பரூக் அப்துல்லா ஆர்வமாக இருந்தார்.


2020ம் ஆண்டு நான் அவரை சந்தித்த போது, இதற்கான தீர்மானத்தை காஷ்மீர் சட்டசபையில் தேசிய மாநாட்டு கட்சி நிறைவேற்றி இருக்கும். நாங்கள் உதவி செய்து இருப்போம். ஆனால், எங்கள் நம்பிக்கையை பெறாதது ஏன் என என்னிடம் பரூக் அப்துல்லா கேட்டார். இச்சட்டம் நிறைவேற்றுவதற்கு முதல் நாள், பிரதமர் மோடியை பரூக் மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் சந்தித்து பேசியிருந்தனர். அப்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்து யாருக்கும் தெரியாது. இவ்வாறு அந்த புத்தகத்தில் துலாத் கூறியுள்ளார்.

மறுப்பு



இதற்கு கண்டனம் தெரிவித்து பரூக் அப்துல்லா கூறியதாவது: புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது, துலாத்தின் கற்பனையான புனைகதை. புத்தகத்தை விற்பனை செய்ய அவர் எடுத்துள்ள மலிவான நாடகம். சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட பிறகு நாங்கள் பல மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருந்தோம். இந்தச் சட்டம் குறித்த விவகாரத்தில் எங்களின் நிலைப்பாடு அனைவருக்கும் தெரியும். இதனால் தான் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டோம்.
காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்போம் என்பது, எனது நண்பர் எனக்கூறிக்கொள்ளும் ஆசிரியரின் கற்பனையில் உருவான புனைக்கதை. 2018 ல் காஷ்மீரில் சட்டசபை ஏதும் இல்லை. புத்தகத்தில் அவர் சொன்னது அனைத்தும் பொய். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement