மணலி மண்டல கூட்டத்தில் அதிகாரிகளை வெளுத்து வாங்கிய மாநகராட்சி துணை கமிஷனர்
மணலி, மணலி மண்டல குழு கூட்டத்தில் பங்கேற்ற வடக்கு வட்டார துணை கமிஷனர், மெத்தனமாக பதிலளித்த அதிகாரிகளை வெளுத்து வாங்கினார்.
சென்னை மாநகராட்சி, மணலி மண்டல குழு கூட்டம், நேற்று முன்தினம் மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நடந்தது. இதில், வடக்கு வட்டார துணை கமிஷனர் கட்டா ரவி தேஜா, மண்டல செயற்பொறியாளர் தேவேந்திரன் உட்பட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, 163 தீர்மானங்கள் மீதான விவாதம் மற்றும் வார்டின் பிரச்னைகள் குறித்து, கவுன்சிலர் பேசினர்.
ராஜேஷ்சேகர், 21வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்
பாடசாலை தெருவின் கான்கிரீட் சாலையில், மழைநீர் தேக்கம் உள்ளது. தொடக்கப் பள்ளி வளாகத்தில், விளக்குகள் எரியாததால், இரவு வேளைகளில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது. ஜலகண்டமாரியம்மன் கோவில் தெரு, ஈ.வெ.ரா., பெரியார் தெருவில், தொட்டி அமைக்கும் பணியால், சாலை போடமுடியவில்லை. மூன்று முதல் நான்கு மணி நேரம் மின் தடை உள்ளது.
தீர்த்தி, 22வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர்
நான்கு மின்மாற்றி, 100 மின் கம்பங்கள் மற்றும் மின்பெட்டிகள் அமைக்கும் பணியில், ஒப்பந்ததாரர் மெத்தனம் காட்டி வருகிறார். அவரே பல மண்டலங்களில் பணி எடுத்துள்ளதால் தொய்வுள்ளது. 'பயோ காஸ்' நிறுவனத்தின் கழிவுநீர் நேரடியாக மழைநீர் வடிகாலில் விடுகின்றனர். இதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. அவர்கள் கண்டுக்கொள்வதில்லை.
ஸ்ரீதரன், 18வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்
மிகவும் மனவேதனையில் இருக்கிறேன். வார்டில் 126 சாலைகள் உள்ளன. குடிநீர், மழைநீர் வடிகால் அதிகாரிகள் மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொள்கின்றனர். சரிவர பணிகள் நடக்கவில்லை. 100க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், தெருவிளக்கு கம்பங்கள் பலவீனமாகி விட்டன. மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை, அதிகாரிகள் செவி மடுத்து கேட்க வேண்டும்.
காசிநாதன், 19வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்
ஒன்பது மாதங்களாக, இ - சேவை மையம் செயல்படவில்லை. வார்டில், நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. அவற்றிற்கு வரி விதிக்க வேண்டும். மாத்துார், மஞ்சம்பாக்கம் போன்ற பகுதிகளில் முறைகேடாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது.
நந்தினி, 15வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்
மணலிபுதுநகர், 80 அடி சாலையில், மீடியன் அமைக்க வேண்டும். நீர்வரத்தின்றி வறண்டு போயிருக்கும் கால்வாய்களை துார்வார வேண்டும். பழைய நாப் பாளையம் தொடக்கப்பள்ளி, ஒரே கட்டடத்தில் இயங்கி வருகிறது. கூடுதல் கட்டடம், மற்றும் மதில் சுவர் அமைத்து தர வேண்டும்.
கவன்சிலர்களில் பேசியதற்கு பின், சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை கமிஷனர் கட்டா ரவி தேஜா பேசினார்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு
அவர் பேசியதாவது:
அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாவிட்டால், எப்படி வேலை செய்வீர்கள். அரசு - மாநகராட்சி பள்ளி வளாகத்தில், 'சிசிடிவி' கேமராக்கள் போட வேண்டும். கூட்டத்திற்கு வரும்போது, துறை குறித்த தரவுகள் கொண்டு வரவேண்டும்.
மழைநீர் வடிகாலில் 'பயோ காஸ்' நிறுவன கழிவுநீர் கலப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டிகளில், தண்ணீர் நிரப்புதை கண்டறிய தொழில் நுட்பம் இருக்கிறதா; இ - சேவை மையங்கள் அமைக்க உள்ளூர் இளைஞர்களுக்கு கவுன்சிலர்கள் வாய்ப்பு தரலாம்.
மணலிபுதுநகர், 80 அடி சாலையில் மீடியனுக்கு பதிலாக ரெடிமெட் சிமென்ட் தொட்டிகள் அமைக்கும் திட்டம் உள்ளது. முறைகேடாக நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது, அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலையோர ஆக்கிரமிப்பு எடுப்பதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகிறீர்கள். தினசரி, ஆக்கிரமிப்பு அகற்றம், அபராதம் விதிப்பு, ஆய்வு குறித்து எனக்கு புகைப்படத்துடன் தகவல் தெரிவிக்க வேண்டும்.
வெயில் காலம் துவங்கிய நிலையில், மின், குடிநீர் போன்ற அத்தியாவசிய துறைகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். மேலும், கவுன்சிலர்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு, மெத்தனமாக பதிலளித்த அதிகாரிகளை வெளுத்து வாங்கினார்.
இதனால், மண்டல கூட்டம் பரபரப்பாக நிறைவடைந்தது.
மேலும்
-
இந்தியாவின் அதிருப்தி எதிரொலி: பாக். உடனான கடற்படை பயிற்சி திட்டத்தை ரத்து செய்த இலங்கை
-
பூணூலை அகற்றச் சொன்ன தேர்வு அதிகாரி; மாணவர்கள் புகாரில் கர்நாடகா போலீஸ் வழக்கு
-
புதிய தொழில்நுட்பங்களை தவிர்க்கும் நபரிடம் வீடு கட்டும் பணியை கொடுக்கலாமா?
-
சென்னையில் அதிக பரப்பளவு வீடுகளை மக்கள் விரும்புவது ஏன்?
-
இறுக்கம் குறைந்த மின் இணைப்பில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு!
-
தனி நில உரிமை இல்லாமல் 'வில்லா' வகை வீடுகள் வாங்காதீர்!