சென்னையில் அதிக பரப்பளவு வீடுகளை மக்கள் விரும்புவது ஏன்?

தனி வீடு கட்டுவதனாலும், அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவதனாலும் காலத்துக்கு ஏற்ப மக்களின் தேவைகள், வாங்கும் திறன் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் வருகின்றன. நாடு முழுதும் மக்கள் வீடு வாங்குவதில் கடந்த 30 ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, தனியா நிலம் வாங்கி, அதில் வீடு கட்டி குடியேறுவது என்ற நிலைப்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன. இதனால், மக்கள் தங்கள் வருவாய் நிலைக்கு ஏற்ற வாய்ப்புகளை தேர்வு செய்து, அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்த வகையில், 30 ஆண்டுகளுக்கு முன் வங்கிகளின் வீட்டுக்கடன் பெற்று சொந்த வீடு கட்டுவது அல்லது வாங்குவது என்பது மிக குறைவாக இருந்தது. ஆனால், தற்போது இதில் வங்கிகளின் இறுக்கமான அணுகுமுறை தளர்ந்து, கேட்டவுடன் வீட்டுக்கடன் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால், சொந்த வீடு வாங்குவது என்ற எண்ணத்தை செயல்படுத்துவதில் மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையில் வர்த்தகம் வெகுவாக அதிகரித்து வருவதை நாம் நேரடியாக பார்த்து உணர்ந்து வருகிறோம்.

இந்த வகையில் சொந்தமாக வீடு வாங்குவது என்று வரும்போது, குடும்பத்தினரின் தேவைகள் ஒரு பக்கம் இருந்தாலும் பெரும்பாலானோர் தங்கள் வருவாய் நிலை அடிப்படையிலேயே வீட்டை தேர்வு செய்கின்றனர். இதில் வீட்டின் சராசரி பரப்பளவு அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன.

குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் மக்கள் எத்தகைய பரப்பளவு கொண்ட வீடுகளை அதிகமாக தேர்வு செய்கின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இதில் தெரியவந்த தகவல்கள் அடிப்படையில் சராசரி பரப்பளவு தொடர்பான புள்ளி விபரங்கள் வெளியிடப்படுகின்றன. இதில், கடந்த, 2019ம் ஆண்டு நிலவரப்படி, அதிக எண்ணிக்கையிலான மக்களின் வீடு தேர்வில் சராசரி பரப்பளவு, 1,100 சதுர அடியாக இருந்தது. ஆனால், 2024ம் ஆண்டு நிலவரப்படி, இந்த சராசரி பரப்பளவு, 1,445 சதுர அடியாக உயர்ந்துள்ளதாக ரியல் எஸ்டேட் சந்தை நிலவர ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த வீடு விற்பனை புள்ளி விபரங்களை துல்லியமாக ஆய்வு செய்ததில், மக்கள் தேர்வு செய்யும் வீட்டின் பரப்பளவு, 31 சதவீதம்வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக மக்களின் வாங்கும் திறனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஒரு காலத்தில், 600 அல்லது, 750 சதுர அடி பரப்பளவில் வீடு வாங்கினால் போதும் என்று நினைத்த மக்கள் தற்போது, 1,400 சதுர அடிக்கு வீடு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றனர். பெரிய வீடு எனும் போது வசதி அடிப்படையில் மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டு வருவதற்கு இது உதாரணமாக அமைந்துள்ளது என்கின்றனர் ரியல் எஸ்டேட்துறை வல்லுனர்கள்.

Advertisement