மே.வங்க கலவரம் பா.ஜ.,வின் திட்டமிட்ட சதி மம்தா பானர்ஜி கடும் குற்றச்சாட்டு

5

கொல்கட்டா : ''முர்ஷிதாபாதில் சமீபத்தில் நடந்த மதக்கலவரம், எல்லை பாதுகாப்புப் படையின் ஒரு பிரிவு, பா.ஜ., மற்றும் மத்திய அமைப்புகள் இணைந்து திட்டமிட்டு செய்த சதி,'' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டிஉள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துஉள்ளது. இங்கு வக்ப் திருத்த சட்டத்துக்கு எதிராக சமீபத்தில் போராட்டங்கள் நடந்தன. முர்ஷிதாபாதில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறின.

இந்நிலையில், முஸ்லிம் மத தலைவர்களை முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கட்டாவில் நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நேரத்தில் மத்திய அரசு அவசர அவசரமாக வக்ப் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

உண்மை தெரியவரும்



மேலும், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை நம் நாட்டுக்குள் ஊடுருவ அனுமதித்துள்ளனர். இவையெல்லாம் சேர்ந்தே வன்முறைக்கு காரணமாகின.

பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையின் ஒரு பிரிவினர் சிலருக்கு பணம் கொடுத்து, கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

எல்லை பாதுகாப்புப் படையின் இந்த நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது; அதில் உண்மை தெரியவரும்.

எல்லையை பாதுகாக்கும் பணியில் பி.எஸ்.எப்., ஈடுபட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டுக்குள் ஊடுருவினால், அதற்கு அவர்களே பொறுப்பு.

பா.ஜ., மற்றும் எல்லை பாதுகாப்புப் படையின் ஒரு பிரிவு, மத்திய அமைப்புகள் இணைந்து, மத கலவரத்தை துாண்டி விட்டுள்ளனர். இந்த கூட்டு சதியே, வன்முறைக்கு காரணம்.

விடமாட்டோம்



வெளி மாநிலங்களில் இருந்து வந்த பா.ஜ.,வினர், இங்கு வன்முறையைத் துாண்டி விட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா குறித்து, பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவரை கட்டுப்படுத்த வேண்டும்.

தன் அரசியல் நோக்கங்களுக்காக அவர் நாட்டை பிளவுபடுத்த பார்க்கிறார். அதனாலேயே, அவசர அவசரமாக வக்ப் திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை பிரதமர் மோடி உடனடியாக கைவிட வேண்டும். நாட்டை பிளவுபடுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது.

ராம நவமியின்போது வன்முறையை ஏற்படுத்த பா.ஜ., முயன்றது; அது தடுக்கப்பட்டது. தற்போது வக்ப் தொடர்பாக வன்முறையைத் துாண்டி விட்டுள்ளனர்.நாங்கள் இங்கு இருக்கும்வரை, ஹிந்து - முஸ்லிம் இடையே பிளவு ஏற்படுத்த விடமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.



பா.ஜ., கிண்டல்!

மம்தா பானர்ஜி பேச்சு குறித்து, மேற்கு வங்க பா.ஜ., தலைவரும், மத்திய அமைச்சருமான சுகந்தா மஜும்தார் கூறியுள்ளதாவது:வங்கதேசம், நேபாளம், பூடான், இலங்கை ஆகிய அண்டை நாடுகளுடன் மேற்கு வங்கம் எல்லையைப் பகிர்ந்து கொள்வதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அவருடைய கற்பனைக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. அவருடைய கற்பனை, தெற்காசியாவையே மாற்றி உள்ளது.வங்கதேசத்தில் இருந்து 2,300 கி.மீ., தொலைவில் இலங்கை உள்ளது. மேலும், அது ஒரு தீவு நாடு. அதனுடன் மேற்கு வங்கம் எப்படி எல்லையை பகிர்ந்து கொள்ள முடியும்.மாநில முதல்வருக்கே, தன் மாநிலம் எதனுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது என்பதை கூற முடியவில்லை. மோசடியால் ஆசிரியர்களான, 25,000 பேர் எந்தளவுக்கு தகுதி வாய்ந்தவர்களாக இருப்பர் என்பதை கணித்துவிடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement