கோவில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: சட்ட விரோதமாக பழனி கோவில் நிதியில், கல்லூரி கட்டுவதை எதிர்த்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த சென்னை ஐகோர்ட், விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு, கோவில் வழக்குகளை நேற்று முன்தினம் விசாரித்தது. அப்போது மனுதாரர் டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, பழனி கோவில் நிதியில், 20 கோடி ரூபாய்க்கு மேல் எடுத்து, சட்ட விரோதமாக தோப்பம்பட்டியில் கல்லூரி கட்டடம் கட்டுவதை எதிர்த்த வழக்கை, அவசரமாக விசாரிக்க வலியுறுத்தினார்.
உடன் நீதிபதிகள், 'அரசு பணத்தில் கல்லூரி வளாகம் கட்டுவதாக இருந்தால் ஆட்சேபனை இல்லை. கோவில் நிதியில் இவ்வளவு பெரிய தொகையை எப்படி எடுத்து பயன்படுத்த முடியும்' என, அறநிலையத்துறை தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அறநிலையத் துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், 'டெண்டர்' மட்டுமே கோரப்பட்டு உள்ளதாகவும், கல்லூரி வளாகம் கட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார். அப்போது மனுதாரர் தரப்பில், இது தவறான தகவல் என்றும், கட்டடம் கட்டப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
அறநிலையத்துறை தரப்பில், 'கல்லூரி வளாகத்துக்கு அடித்தளம் மட்டும் கட்டுகிறோம். கல்லூரிகள் கட்டும் விவகாரம் தொடர்பாக, 2021ல் மனுதாரர் தாக்கல் செய்த வழக்கு, இன்னும் இறுதி விசாரணைக்கு வரவில்லை. இடைக்கால உத்தரவு செயல்படுத்தப்பட்டது' என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், 'இறுதி விசாரணை வரை அறநிலையத்துறை ஏன் காத்திருக்கக் கூடாது' என, கேள்வி எழுப்பினர். இவ்விவகாரம் குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக, அறநிலையத்துறை தரப்பில் பதில் தரப்பட்டது.
மனுதாரர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது: பழனியில் கல்லூரி வளாகம் கட்ட பிறப்பித்த அரசாணை செல்லாது. ஏனெனில் முதலில் அறிவிக்கப்பட்ட இடத்தை விடுத்து, தற்போது வேறொரு இடத்தில் கட்டுகின்றனர். அந்த அதிகாரம், அறநிலையத்துறை செயலருக்கு கிடையாது.
உயர் கல்வித்துறை செயலருக்குத் தான் உள்ளது. வளாகம் கட்டப்படும் இடம் பழனி கோவில் நிலம் கிடையாது. கோவிலின் சொந்த இடத்தில் கட்டுவதாக இருந்தாலும், கோவில் உபரி நிதி கையாளும் விதிகள் படிதான் அறநிலையத் துறை கமிஷனர் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், 'கல்லூரி வளாகம் கட்டிய பின், உயர் கல்வித்துறை செயலர் இடம் மாற்றம் உத்தரவு பிறப்பிக்கக் கூடும். எனவே, இவ்விவகாரத்தில் இடைக்கால தடை உத்தரவு விதிக்கவில்லை' எனக்கூறி, வழக்கை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.








மேலும்
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்