அ.தி.மு.க.,விடம் 84 தொகுதிகள் கேட்க வேண்டும்: அண்ணாமலை

'லோக்சபா தேர்தலில் பெற்ற ஓட்டு சதவீதம் அடிப்படையில், அ.தி.மு.க., கூட்டணியில், சட்டசபை தொகுதிகளை பங்கீடு செய்ய வேண்டும்' என, பா.ஜ., மேலிடத்தில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தரப்பில் வலியுறுத்திய தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என, மத்திய அமைச்சர் அமித் ஷா சொல்லவில்லை என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியிருக்கிறார்.
அதிர்வலை
அதாவது, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும். கூட்டணி கட்சியான பா.ஜ.,வுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்பதை, பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார்.
இது, தமிழக பா.ஜ.,வில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அண்ணாமலையும், அவரது ஆதரவாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். '2026ல் தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி மலரும்' என, அமித் ஷா அழுத்தம் திருத்தமாக இரண்டு முறை கூறி சென்றுள்ளார்.
ஆனால், கூட்டணி ஆட்சி என்ற கருத்தை, பழனிசாமி ஏற்க மறுக்கிறார்.
எனவே, கடந்த லோக்சபா தேர்தலில், இரு கட்சிகளும் பெற்ற ஓட்டு சதவீதம் அடிப்படையில், சட்டசபை தொகுதிகளை பங்கீடு செய்ய வேண்டும் என, டில்லி மேலிடத்திற்கு, அண்ணாமலை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதாவது, கடந்த லோக்சபா தேர்தலில், 20.5 சதவீத ஓட்டுகளை அ.தி.மு.க., கூட்டணி பெற்றுள்ளது.
பா.ஜ., கூட்டணி 18.5 சதவீதம் ஓட்டுகள் பெற்றுள்ளது. லோக்சபா தேர்தலுடன் நடந்த விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., 2வது இடமும், அ.தி.மு.க., 4வது இடமும் பிடித்தன.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., 12 தொகுதிகள் கேட்டது. ஆனால், ஆறு தான் தர முடியும் என கூறி, அ.தி.மு.க., கூட்டணியை முறித்துக் கொண்டது.
7 சதவீதம் ஓட்டுகள்
கூட்டணி முறிவுக்கு சிறுபான்மையினர் ஓட்டுகளை, அ.தி.மு.க., தரப்பு காரணமாக சொன்னாலும், நடந்தது, தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னை தான்.
அதேபோல, உள்ளாட்சி தேர்தலிலும், பா.ஜ.,வுக்கு 5 சதவீதம் இடங்கள் கேட்டதற்கு, அதைக் கொடுக்க அ.தி.மு.க., முன்வரவில்லை. இதனால், பா.ஜ., தனித்து போட்டியிட்டு, 7 சதவீதம் ஓட்டுகள் பெற்றது.
அதனால், கடந்த லோக்சபா தேர்தலில் பெற்ற ஓட்டு சதவீதம் அடிப்படையில், வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு 84 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.
அதற்கு குறைவான தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்ள வேண்டாம் என, பா.ஜ., மேலிடத்தில், அண்ணாமலை வலியுறுத்தியிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இப்படி அதிகத் தொகுதிகளை பெறுவதால், கூட்டணியில் பா.ஜ.,வுக்கு ஆதரவான கட்சிகள் இடம் பெறும்போது, அக்கட்சிகளுக்கு பா.ஜ., தரப்பில் தொகுதிகள் ஒதுக்க வசதியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுஉள்ளது.
இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
இது தொடர்பாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை, கூட்டணி ஆட்சி கிடையாது என்பதில், பழனிசாமி தெளிவாக இருக்கிறார். நடிகர் விஜயின் த.வெ.க.,வுடன் கூட்டணி அமையாமல் போனதற்கான பிரதான காரணமே, கூட்டணி ஆட்சி குறித்து வலியுறுத்தியதுதான். அதை தெளிவாக, அமித் ஷாவிடம் சொல்லித்தான், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துக்கொள்ள பழனிசாமி ஒப்புக்கொண்டார்.
ஆசைப்படலாம்
'தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்' என அமித் ஷா சொன்னதற்கு, கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் இடம் பெற்ற கூட்டணி ஆட்சி என்பது அர்த்தமல்ல. கூட்டணியில் இருக்கும் பிரதான கட்சியான அ.தி.மு.க.,வின் ஆட்சி என்பதுதான்.
அதே போல, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை தாங்கப் போவதே அ.தி.மு.க., தான். அதனால் கூட்டணியில், எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதை, கட்சிப் பொதுச்செயலர் பழனிசாமி தான் முடிவெடுப்பார்.
பா.ஜ., தரப்பில் 84 என்ன, 94 தொகுதிகளில் போட்டியிடக்கூட ஆசைப்படலாம்; தவறில்லை. ஆனால், ஒதுக்கீடு செய்ய வேண்டுமே. தேர்தல் நெருக்கத்தில், எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி ஒதுக்கப்படும் என்பதை பழனிசாமி மட்டுமே முடிவெடுத்து அறிவிப்பார்.
இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -













மேலும்
-
குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியை கை கழுவிய காங்கிரஸ்; தனித்து போட்டி என அறிவிப்பு
-
கோவில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
-
கால தாமதமான அறிவிப்பு; பின் தேதியிட்ட வயது வரம்பு; போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு தயாரான பலர் தவிப்பு
-
சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம்: டிரம்ப் அடுத்த அதிரடி திட்டம்!
-
வெண்ணை உருண்டை பாறை பாதுகாக்கப்பட்ட சின்னமானது
-
டில்லியில் அதிகாலை இடிந்து விழுந்த கட்டடம்: 4 பேர் பரிதாப பலி