கணவர் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொன்ற மனைவி கைது

9


பிவானி: ஹரியானாவில், காதலன் உதவியுடன் கணவரின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கிக் கொன்று, உடலை கால்வாயில் வீசிய, 'யு டியூபர்' மனைவியை போலீசார் கைது செய்தனர்.
ஹரியானாவின் பிவானியை சேர்ந்தவர் ரவீணா. 'பேஸ்புக், இன்ஸ்டா' உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ள இவர், யு டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். ரவீணாவுக்கும், பிரவீன் என்பவருக்கும், கடந்த 2017ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, 6 வயதில் மகன் உள்ளார்.

இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் சேர்ந்து வீடியோக்களை உருவாக்கி ரவீணா சேனலில் பதிவிட்டு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கணவர் பிரவீன், ரவீணாவை கண்டித்தார்.

இதற்கிடையே, ரவீணா மற்றும் சுரேஷ் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

கடந்த 25ம் தேதி பிரவீன் வீடு திரும்பிய போது, சுரேஷ் மற்றும் ரவீணா தனிமையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக கணவன் - மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அன்றைய தினம் இரவே, காதலன் உதவியுடன் கணவர் பிரவீனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து ரவீணா கொன்றார்.

பின்னர், இருவரும் சேர்ந்து அவர் உடலை, ஊருக்கு வெளியே உள்ள கால்வாயில் வீசினர்.

பிரவீன் குடும்பத்தார் கேட்ட போது, அவரைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என ரவீணா கூறி வந்தார். இதைத் தொடர்ந்து பிரவீன் குடும்பத்தார் போலீசில் புகாரளித்தனர்.

அதே சமயம், கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட உடல் பிரவீனுடையது தான் என சில நாட்களுக்கு பின் அடையாளம் காணப்பட்டது.

இதற்கிடையே, ரவீணா மற்றும் சுரேஷ் இருவரும் பிரவீன் உடலை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது.

இதையடுத்து, ரவீணாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், அனைத்து உண்மைகளும் வெளிவந்தன.

கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று ரவீணாவை கைது செய்தனர். தப்பியோடிய காதலன் சுரேஷை தேடி வருகின்றனர்.

Advertisement