காரைக்கால் துறைமுகத்தில் படகு எரிந்து ரூ.10 லட்சம் சேதம்

காரைக்கால்; காரைக்கால் துறைமுகத்தில் விசைப் படகு பழுது பார்க்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது.

காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். தற்போது தடைக்காலம் என்பதால் மீன்பிடி படகுகளை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காரைக்கால் மீன்பிடி துறைமுகம் அருகில் நிறுத்தியிருந்த விசைப்படகில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

விசாரணையில் காரைக்கால், கிளிஞ்சல் மேடு பாக்கியராஜ் என்பவரது விசைப் படகில் பழுது பார்க்கும் போது தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இது குறித்து நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது.

Advertisement