10 ஆயிரம் பேர்... போலீசாரின் துப்பாக்கி பறிப்பு... மே.வங்க கலவரம் குறித்து வெளியான பகீர் தகவல்

11

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் வக்ப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த கலவரத்தின் போது திடீரென 10 ஆயிரம் பேர் ஒன்று கூடியதும், போலீசாரின் ஆயுதங்களை அவர்கள் பறித்து சென்றதாக உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது.


பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வக்ப் வாரிய சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் நகரில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். அரசு சொத்துகள், போலீஸ் வாகனங்கள் , தனி நபர்களின் வாகனங்களும் தீவைக்கப்பட்டன. சேதப்படுத்தப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


இக்கலவரம் தொடர்பாக கோல்கட்டா ஐகோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் மாநில அரசு 34 பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் கடந்த 11ம் தேதி கலவரம் எப்படி நடந்தது என விளக்கிக் கூறப்பட்டு உள்ளது.


அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: முர்ஷிதாபாத்தின் ஜாங்கிபூர் பகுதியில் 4 ஆயிரம் - 5 ஆயிரம் பேர் அடங்கிய கும்பல் போலீசை தாக்கி ஆயுதங்களை பறித்துச் சென்றது. பொதுப்பணித்துறை மைதானத்தில் 8 -10 ஆயிரம் பேர் ஒன்று கூடினர். அவர்களில் 5 ஆயிரம் பேர் திடீரென தேசிய நெடுஞ்சாலை சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து மோசமாக நடந்து கொண்ட அவர்கள் ஆபாச வார்த்தைகளால் திட்டிக் கொண்டே போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கினர். இரும்பு கம்பிகள், மரக்கட்டைகள், குச்சிகளாலும் தாக்கினர்.


அவர்களில் ஒருவன், சப்இன்ஸ்பெக்டர் ஒருவரின் பிஸ்டலை பறித்துச் சென்றான். இதனையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீச வேண்டிய நிலை ஏற்பட்டது.

142 சுற்றுக்கள் ரப்பர் குண்டுகளையும், 10 முறை கண்ணீர் புகை குண்டுகளையும் போலீசார் வீசினர். 8 முறை புகை குண்டுகளையும் வீசினர்.


கோஸ்பாரா பகுதியில் ஹிந்து குடும்பத்தினரின் வீடுகளை சூறையாடினர். ஜாப்ராபாத் நகரில் 2 பேர் கொல்லப்பட்டனர். இக்கலவரம் தொடர்பாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement